பெரியாரை இழிவுபடுத்திப் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திராவிட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று முன் தினம்(22.1.2025) சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி 3000 பேர் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று காலை திமுகவில் இணைந்தனர். அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த இணைப்பு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியில் இருந்து மண்டலச் செயலாளர் - 1, மாவட்டச் செயலாளர்கள் - 8 ஒன்றிய செயலாளர்கள் - 5 சார்பு அணி நிர்வாகிகள் - 9 தொகுதி செயலாளர்கள் - 6 முன்னாள் எம்.பி வேட்பாளர்கள் - 3 முன்னாள் எம்.எல்.ஏ வேட்பாளர்கள் - 6 உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல முன்னாள் நாதக உறுப்பினர்கள் என ஏராளமானோர் இணைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, முதலமைச்சருக்கு பெரியார் சிலையை நினைவுப் பரிசாக வழங்கிய அவர்கள், “கதாசிரியர்களின் புரட்டுகளை நம்பிச் சென்று சீரழிந்தவர்கள் மீண்டு தந்தையிடம் வந்திருக்கிறோம். அனைத்தையும் இழந்து நாம தமிழரில் பயணித்தோம், தகுதியற்ற சுயநலத் தலைமையை உணர்ந்து சரியான தலைமையான திமுகவிற்கு வந்துள்ளோம். தமிழ் தேசியம் என்ற பெயரில் ஏமாற்றுவோரை புரிந்து வந்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.