மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள நலசோபரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் ரயிலில் பயணம் செய்த போது தாக்கி தன்னை ஆட்டோ டிரைவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு, ராஜ் ரத்தன் என்ற ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் ஆட்டோ டிரைவருடன் விரார் பகுதியில் உள்ள அர்னாலா கடற்கரைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள விருந்தினர் அறை ஒதுக்க முடியாததால், கடற்கரையில் ஒன்றாக இருந்துள்ளனர். அப்போது, அந்த பெண்ணை ஆட்டோ டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தன்னுடைய பெற்றோருக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ? என்று அந்த பெண் பயந்துள்ளார். அதனால், அந்த பெண் ஒரு அறுவை சிகிச்சை பிளேடை வாங்கி அதை கற்களுடன் சேர்த்து தனது பிறப்புறுப்பில் வைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், அவர் ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், கடுமையான வலியை தாங்க முடியாத அந்த பெண் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு அவசர சிகிச்சை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், அந்த பெண்ணிடம் வாக்குமூலத்தை பெற்றனர். ஆரம்பத்தில், தன்னை அநாதை என்று கூறிய அந்த பெண், அதன் பின்னர் தந்தை இருப்பதாக முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இந்த முரண்பாடான வாக்குமூலங்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.