Skip to main content

தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம்; துணை முதல்வர் பேட்டி!

Published on 24/01/2025 | Edited on 24/01/2025
TN female players issue Dy CM Interview

பஞ்சாப் மாநிலத்தில் 2024-2025ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் இருந்து பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து கபடி வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இத்தகைய சூழலில் தான், அன்னை தெரசா பல்கலைக்கழக கபடி வீராங்கனைகளுக்கும், தர்பங்கா பல்கலைக்கழக கபடி வீராங்கனைகளுக்கும் இடையே இன்று (24.01.2025) கபடி போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியின் போது எதிர் அணியினர், அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு அணிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, இரு அணிகளும் நடுவரிடம் சென்று முறையிட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் நடுவர், அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு அணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இரு அணியினரும் அங்கு இருந்த நாற்காலிகளைத் தூக்கி வீசி சண்டையிட்டுக் கொண்டனர். இதனால், அந்த இடமே களேபரமானது. பஞ்சாபில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் நடைபெற்று வரும் கபடி போட்டியில் கலந்துகொள்ளத் தமிழகத்தில் இருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து 36 வீராங்கனைகள் சென்றுள்ளனர் அவர்களுடன் 3 குழு மேலாளர்கள்,3 பயிற்றுநர்கள் சென்றுள்ளனர். இன்று நடைபெற்ற போட்டியில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கு, தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான இந்த கபடி போட்டியில் தமிழக வீராங்கனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார் வந்தது. இது குறித்து உடனடியாக தொலைப்பேசியில் அழைத்துப் பேசியுள்ளோம்.

இந்த புகாரின் அடிப்படையில் பயிற்றுநர் பாண்டியராஜனை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இந்த விவகாரம் குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இது குறித்து வதந்தி பரப்பப்படுகிறது. கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடனடியாக அங்குள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடன் தொடர்பு கொண்டு  பேசப்பட்டது.

TN female players issue Dy CM Interview

விளையாட்டில் புள்ளிகள் வழங்கும் முறையில் சிறிய குளறுபடி ஏற்பட்டு சிறு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவியது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளஙகளில் வெளியாகின. அணைத்து வீராங்கனைகளும் பாதுகாப்பாக உள்ளனர். இனி விளையாட்டு வீராங்கனைகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். விளையாட்டு வீராங்கனைகள் இன்று டெல்லி அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பயிற்றுநரை காவல்துறை விடுவித்துள்ளனர். இன்று நள்ளிரவு டெல்லி செல்லும் வீராங்கணைகள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு மற்றும் தங்குகின்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வீராங்கனைகளுடன் சென்ற விளையாட்டு இயக்குநர் கலையரசியுடன் பேசியுள்ளோம்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்