தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட அதிமுக நிர்வாகியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தனியார் அறக்கட்டளை சார்ப்பில் 39 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்தார். இந்த அறக்கட்டளையின் நிறுவனர் ஹரிகிருஷ்ணன், பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளராக இருந்து வருகிறார். இவரது தந்தை எஸ். முரளி(எ) ரகுராம் விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் அதிமுக எம்.பி சி.வி. சண்முகத்திற்கு மிகவும் நெருக்கம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரகுராம், அண்ணாமலை திருமணம் செய்து வைத்த நிகழ்வில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டுள்ளார். மேலும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மகன் ஹரிகிருஷ்ணனுடன் சேர்ந்து கவனித்து வந்த ரகுராம், அண்ணாமலையுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. மேலும் அவர் மேடையிலேயே அண்ணாமலையை புகழ்ந்து பேசியுள்ளார்.
ஏற்கனவே அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் பனிப்போர் நிலவி வரும் நிலையில் ரகுராமின் அண்ணாமலையுடனான நெருக்கம் தலைமைக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து எஸ். முரளி (எ) ரகுராமனை அதிமுகவில் இருந்து நீக்கியதாகக் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகச் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் முரளி (எ) ரகுராமனை நீக்கி அதிமுக தலைமைக் கழகம் உத்தரவிடுவதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.