அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், தீபாவளி அன்று ஆடையின்றி ஒருவர் வீட்டினுள் சென்ற விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் நீலகிரி தொகுதி மக்களவை எம்.பி.யாக இருந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் நகராட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் தீபாவளி பண்டிகை அன்று மதுபோதையில், முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் ஆடைகள் இன்றி வெற்றுடம்புடன் நுழைந்துள்ளார்.
அவர் அப்படி நுழைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வீட்டார், செய்வதறியாது தாக்கியுள்ளனர். அதேசமயம் அவர், ஆடையின்றி வீட்டிற்குள் இருந்ததை வீடியோ காட்சியாக படம் பிடித்துள்ளனர். அதன்பிறகு அவரை வெளியேற்றிவிட்டு, குன்னூர் நகர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, அதிமுக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், தான் தாக்கப்பட்டதாகக் கூறி கடந்த 5ஆம் தேதி குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார்.
இதுகுறித்து இருவரிடமும் விசாரணை நடத்திய காவல்துறையினர், வீட்டிற்குள் குடிபோதையில் தகாத வார்த்தை பேசிய முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மீதும், அவர் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதிமுக முன்னாள் எம்.பி. மது போதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் ஆடையின்றி நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.