கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் மாணவி ஒருவரை அந்த பள்ளியில் பணியாற்று மூன்று ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நேற்று திருச்சி மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தாளாளரின் கணவர் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் அத்துமீறி நடக்கும் சம்பவம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், சேலத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் சிக்கனம்பட்ட் ஊராட்சி குப்பூரில் அரசு மாதிரி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது . இந்த பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பள்ளியில் பணியாற்றும் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் சிவகுமார்(40) பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. மேலும் மாணவியை பார்த்து அழகாக இருப்பதாக கூறி சிவகுமார் அத்துமீறியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி சம்பவம் குறித்து பள்ளியின் தலைமையாசிரியரிடம் கூறியுள்ளார். அதன்பின்னர் தலைமையாசிரியர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் பள்ளிக்கு வந்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில், சம்பந்தப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவிக்கு சிவகுமார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியான நிலையில், தலைமையாசிரியர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிவகுமார் குறித்து புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார் சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களாக பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும், இதனை உடனடியாக அரசு கவனத்தில் எடுத்துச் சரிசெய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.