கள்ளக்குறிச்சி நகராட்சியில் பைக் - சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் கட்டண கழிப்பறை, வெளிவட்ட சுங்க கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு ஆண்டிற்கான குத்தகை தொடர்பான ஏலம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த நபர் அளித்த டெண்டர் கோரிய மனுவை அதிகாரிகள் பெறாமல் புறக்கணித்ததாகவும். இதனால் ஏலத்தை நடத்தக் கூடாது எனக்கூறி அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப் புள்ளி நிர்வாக நலன் கருதி ஒத்தி வைக்கப்படுவதாக நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி அறிவித்தார். தொடர்ந்து இதில் பலரும் டெண்டர் கோரி மனு வழங்கியிருந்த நிலையில் மீண்டும் இன்று மாலை ஏலம் நடைபெறும் என நகராட்சி ஆணையர் வாய்மொழி உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில் தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் மகேஸ்வரி முற்றுகையிட்டு ஏலத்தை நடத்தக்கூடாது என அதிமுகவினரும் ஏலத்தை நடத்த வேண்டும் என திமுகவினரும் போட்டிப் போட்டுக் கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. தொடர்ந்து நிர்வாக காரணங்களால் ஏலம் ஒத்திவைக்கப்படுவதாக நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மீண்டும் அறிவித்தார்.
தொடர்ந்து காலை முதலே ஏலத்தை நடத்த வேண்டும் என திமுகவினரும் ஏலத்தை நடத்தக்கூடாது என அதிமுகவினரும் இரு வேறு கருத்துக்களைக் கூறி நகராட்சி அலுவலகத்தில் குவிந்ததால் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தின் முகப்பு வாயில் மூடப்பட்டது.