நாகப்பட்டினத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்ட மேடையில் அதிமுக தொண்டரே செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. செருப்பு வீசிய மகேஷ் என்பவரை அமைச்சரின் ஆதரவாளர்கள் அடித்து துவைத்தனர்.
47 ஆண்டுகளை கடந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டம் தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நாகை அவுரி திடலில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கச்சத்தீவு விவகாரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மேடையில் ஏறிய அதிமுக தொண்டர் மகேஷ், ஓ.எஸ்.மணியனை நோக்கிச்சென்றவர், திடீரென மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகள் மீது செருப்பை வீசி தாக்க முயன்றார். உடனே அவரை தடுத்த அங்கிருந்த நிர்வாகிகள் மேடையிலேயே அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வெளிப்பாளையம் போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் செருப்பு வீசிய நபர் கீழையூர் ஒன்றியம் கொளப்பாடு கிராமத்தை சேர்ந்த மகேஷ் என்பதும், கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் செருப்பு வீசியதும் தெரியவந்துள்ளது.