எப்போதும் அரசு நிகழ்ச்சி என்றால் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் முன்னிலையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் மூலமே நடத்தப்படும். ஆனால் திருச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் ராசாமணியை பின்னுக்கு தள்ளி ஒதுக்கிய சம்பவம் அதிகாரிகள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபகாலமாக திருச்சியில் உள்ள அமைச்சர்கள், மா.செ. இடையே நடக்கும் போட்டி அரசியலில் அரசு அதிகாரிகள் யாருக்கு முன்னிலை கொடுப்பது என்று தெரியாமல் குழம்பி போய் மாறி மாறி திட்டு வாங்கி அரசியல்வாதிகள் யாரையும் அழைக்காமல் திருச்சி மாநகராட்சியை பொறுத்த வரையில் அதிகாரிகளே விழாவின் சிறப்பு அழைப்பாளராக மாறி திறந்து வைக்க ஆரம்பித்தனர். இது அரசியல்வாதிகள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 16 எம்ஆர்ஐ ஸ்கேன் இயக்க துவக்க விழா நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, எம்.பி. குமார், மருத்துவமனை டீன் அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் உள்ளிட்டோர் முன்வரிசையில் அமர்ந்து பேட்டியளித்தனர். அரசு நிகழ்ச்சியாக இருந்தபோதிலும் இதில் கலெக்டரை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் முன்வரிசையில் இடம் கிடைக்காமல் கலெக்டர் கட்சி பிரமுகர்களுடன் பின்னால் பரிதாபமாக அமர்ந்திருந்தார். 3 அமைச்சர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தும் கலெக்டரை பின்னுக்கு தள்ளி அவர் யாரோ ஒருவர் போன்று ஒதுக்கினார்கள் அரசியல்வாதிகள். அது போல ஸ்கேன் மிசினை பார்க்கும் போது கலெக்டர் இருக்கிற இடமே தெரியவில்லை.