
சென்ட்ரல் மற்றும் டி.எம்.எஸ் ஆகிய இரு மெட்ரோ ரயில் நிலையத்தின் சேவை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த வழிதடங்களின் இடையே இலவச பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சனிக்கிழமை மட்டும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 500 பேர் பயணம் செய்துள்ளனர். மேலும் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 518 பேர் இலவசமாக பயணித்தனர். இந்நிலையில் வேலை நாளான திங்கள்கிழமையும் இலவசம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமையும் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையிலும், தேனாம்பேட்டை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரையிலும் பயணிகள் இலவசமாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் விரிவாக்கத்தையொட்டி நடைபெற்று வரும் சோதனை காரணமாக கடந்த நான்கு நாட்களாக மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இலவசப் பயணம் ஏற்பாடு செய்துள்ளது.