
தஞ்சையில் நேற்று (14.07.2021) விவசாயிகளுடன் கலந்தாலோசித்து விவசாயிகளுக்கான பட்ஜெட் குறித்த கருத்துகளைக் கேட்டு முடித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இன்று திருச்சி வருகை தந்தார்.
இன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 119ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் 2021 - 22ஆம் ஆண்டு தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை எழுத்து மூலம் அமைச்சரிடம் தெரிவித்து வேளாண்மையில் செயல்படுத்த வேண்டிய பல புதிய திட்டங்கள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.