தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த வாரம் மத்திய அரசின் சுகாதாரத்துறை செயலாளரிடம் இருந்து சுற்றறிக்கை வந்தது. அதில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கிறது எனக் கூறப்பட்டு இருந்தது. அதேபோல் தமிழகத்திலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வரை தினந்தோறுமான கொரோனா பாதிப்பு 2 என்ற கணக்கில் இருந்தது. ஆனாலும் கூட கடந்த 8 முதல் 9 மாதங்களாக கொரோனா தொற்றினால் ஏற்பட்ட இழப்பு ஒன்றிரண்டு அளவிலே இருந்தது. உயிரிழப்பு என்பது இல்லாத நிலையே இருந்தது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஒமிக்ரான் வகை எக்ஸ்பிபி பிஏ2 என்ற உருமாற்றம் ஆன வைரஸ் பாதிப்பு தான் ஏற்பட்டுக் கொண்டுள்ளது. இதனால் உயிரிழப்பு இல்லாத நிலையும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு செல்ல தேவையில்லாத நிலையும் உள்ளது. இந்நிலையில் வெறும் 2 என்ற அளவில் இருந்த தொற்றின் எண்ணிக்கை நேற்று 76 என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. இந்தியா முழுவதும் 200க்கும் கீழ் இருந்த எண்ணிக்கை நேற்று ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஹெச்3என்2 என்ற வைரஸ் பாதிப்பு இருந்தது. கடந்த வாரத்தில் 1586 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. நேற்று இரவு வரை கடந்த 10 நாட்களில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கை 23833. இந்த காய்ச்சல் முகாம்களின் மூலம் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 47 ஆயிரத்து ஒன்று. இதற்கு ஊரடங்கு எல்லாம் தேவை இல்லை. அந்த பதற்றத்தை எல்லாம் நம் ஏற்படுத்த தேவை இல்லை. தற்போது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பதை சொல்வதற்கான சந்திப்பு தான் இது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் டெல்லி சென்ற போது நாடாளுமன்ற வளாகத்தில் மூன்று முதல் நான்கு கிலோமீட்டருக்கு நடந்துள்ளார். டெல்லியில் மாசுபாடு அதிகமாக இருக்கும். நுரையீரல் பாதிப்பு இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு நாள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். பின் பொதுப்பிரிவிற்கு மாற்றப்பட்டுவிட்டார். கொரோனா தொற்று ஏற்பட்டதால் கொரோனா பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் நன்றாக உள்ளார்” எனக் கூறினார்.