விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகில் உள்ள முட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ கணபதி(32). இவர், திண்டிவனம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த 9ம் தேதி சில மர்ம நபர்கள் வழக்கறிஞர் ராஜகணபதியை தொடர்பு கொண்டனர். அதில் பேசிய ஒருவர், மதுராந்தகம் காவல் நிலைய போலீசார் தனது சகோதரரை பிடித்து வைத்துள்ளனர். அவரை மீட்க வேண்டும். தாங்கள் அதற்கு வந்து உதவி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
வழக்கறிஞர் உடனடியாக தனது வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் திண்டிவனம் சென்ற வழக்கறிஞர் தனது வாகனத்தை விட்டுவிட்டு, அந்த போனில் அழைத்த மர்ம நபர்களுடன் ஒரு காரில் ஏறிச் சென்றுள்ளார். காரில் செல்லும் போது காருக்குள் மேலும் மூன்று நபர்கள் இருந்துள்ளனர். அவர்கள் வழக்கறிஞர் ராஜகணபதியிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசி வம்பு செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கறிஞருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
காரில் செல்லும்போது ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் காரை நிறுத்தி மேலும் ஒருவரை காரில் ஏற்றிக் கொண்டனர். தன்னை தவறான நோக்கத்தில் கடத்துகிறார்கள் என்பதை புரிந்து கொண்ட ராஜகணபதி, ஓங்கூர் சுங்கச்சாவடியை கடக்கும்போது கடத்தல் காரர்களிடம் இருந்து தப்பித்துள்ளார். பிறகு சுங்க சாவடி ஊழியர்களிடம் தான் கடத்தப்பட்டது குறித்து தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கறிஞர் ராஜா கணபதி கடத்தப்பட்டது குறித்து ஒரு வழக்கை பதிவு செய்தனர். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி வழக்கறிஞர் காரில் கடத்தப்பட்ட நிலையில் இதுவரை போலீசார் குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்யப்படவில்லை. இதையடுத்து திண்டிவனம் வழக்கறிஞர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று திண்டிவனம் நீதிமன்றம் அருகில் செல்லும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டிவனம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு வழக்கறிஞர்கள் தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.