44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு வெகு விமர்சையாக செய்துவருகிறது. தமிழ்நாடு முழுவதும் செஸ் ஃபீவரை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் அந்த ஃபீவர் கொஞ்சம் கூடுதலாக உள்ளது. சென்னையில் திரும்பு இடங்கள் எல்லாம் செஸ் ஒலிம்பியாட் குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் அந்த துவக்க விழாவிற்காக நேரு உள்விளையாட்டு அரங்கு தயாராகி வருகிறது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கும் நிலையில் அதற்கான பாதுகாப்பு பணிகளை தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி வருகிறது. அன்றைய தினம் 5 அடுக்கு பாதுகாப்புடன் சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி நண்பகல் முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்தில் மாற்றங்கள் இருக்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. புளியந்தோப்பு டிமலஸ் சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை வழியாக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. ஈ.வே.கி சம்பத் சாலை, ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கிச் செல்ல அனுமதி இல்லை, காந்தி இர்வின் சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. பிராட்வேயில் இருந்து வரும் வணிக நோக்கிலான வாகனங்கள் குறளகம், வால்டாக்ஸ் சாலை வழியாகத் திருப்பிவிடப்படும். இந்த வாகனங்கள் வியாசர்பாடி மேம்பாலம் வழியாக சென்று தங்கள் வழித்தடங்களை அடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.