2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பேரவை துவங்கி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய உடனே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது, எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல் காரணமாக அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் அறிவுறுத்தியபோதிலும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் உரைக்கு முன் பேச வாய்ப்பளிக்காததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக மக்களுக்கு அல்வா கொடுத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜாமீனில் வெளிவந்திருக்கும் ஜெயக்குமார் திருச்சி காவல்நிலையத்தில் கையெழுத்திட வந்திருந்தார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''ஒரு கட்சியினுடைய தலைமை நிர்வாகிகள் அல்லது கட்சி சார்ந்த முக்கிய நிர்வாகிகள் வரும்பொழுது தொண்டர்கள் தன்னெழுச்சியாக வருவது காலங்காலமாக நடக்கிற விஷயம். இப்படி தொண்டர்கள் கூடுவதைக்கூட இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி தேர்தல் நேரத்தில் பத்தாயிரம் பேரைக் கூட்டும்போது கரோனா வராது. ஆனால் எங்கள் தொண்டர்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் எழுச்சியுடன் வருவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை இவங்க நிறைவேற்றப்போவதில்லை. வழக்கம்போல அல்வா கொடுக்கிற வேலையைத்தான் இவர்கள் செய்வார்கள். திருநெல்வேலி அல்வா. எங்கள் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு லேபில் ஒட்டும் வேலையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.