கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் நாளை (10/06/2024) திறக்கப்பட இருக்கின்றன. இதற்கு முன்பாகவே, பள்ளிகளை திறப்பதற்கு முன்பு பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தவேண்டும்; பள்ளியில் தூய்மையான குடிநீரை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வி துறை வழங்கியுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பள்ளியில் கட்டடங்கள் சேதமடைந்திருக்கும் நிலையில் சமூக விரோதிகள் நடமாட்டத்தால் மது பாட்டில்கள் ஆங்காகே கிடப்பது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி 1966 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது அப்பள்ளி கட்டடங்கள் பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. மேஜைகள் உள்ளிட்டவை முழுவதுமாக சேதமடைந்து பள்ளிக்கூட வளாகத்தின் ஒரு அறையில் கொட்டப்பட்டுள்ளது. அதேபோல் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகரித்ததால் ஆங்காங்கே காலி மது பாட்டில்களும் கிடக்கிறது. உடனடியாக பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டும், சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தில் நுழைவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.