Skip to main content

'அதிமுக ஓட்டு எங்களுக்குத்தான்'- லிஸ்ட்டில் சேர்ந்த திமுக

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
 'ADMK votes are for us' - DMK joined the list

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன.

திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'முன் காலங்களில் அதிமுகவிற்காகவும், தேமுதிகவிற்கும் ஆதரவு தெரிவித்து பணியாற்றியதால் அந்த உரிமையோடு கேட்கிறேன் அதிமுகவினர், தேமுதிகவினர் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்' என மேடையில் பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நாம் தமிழர் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து இருந்தனர்.

 'ADMK votes are for us' - DMK joined the list

இதனால் அதிமுக மற்றும் தேமுதிக வாக்குகளைப் பெற நாம் தமிழர் தீவிரம் காட்டுவதாக கருத்துக்கள் எழுந்தது. அதேநேரம் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், 'தாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவெடுத்ததுள்ளதால் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க முடியாது' எனத் தெரிவித்திருந்தார்.

 'ADMK votes are for us' - DMK joined the list

அதேநேரம் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவின் ஆதரவை நேரடியாக கோரியுள்ளார். முன்னதாக அவருடைய பிரச்சார மேடையில் இடம் பெற்றிருந்த பேனரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அடையாளமாக மோடியுடன் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அதோடு மட்டுமல்லாது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'நாங்கள் தேர்தலை புறக்கணித்து விட்டோம் என்பது எங்களுடைய கட்சி தொண்டர்களுக்கும் தெரியும். ஆனால் அதிமுக கூட்டணி இல்லாத பாமக மேடையில் ஜெயலலிதா புகைப்படம் வைப்பது என்பது செய்யக்கூடாத ஒன்று. ஆனால் இன்று அதைச் செய்கிறார்கள் என்றால் அது சந்தர்ப்பவாத அரசியல் நோக்கமாகத்தான் இருக்கும். அப்படித்தான் அதைக் கருத வேண்டும். அதேநேரம் படத்தை போடாதீர்கள் என்று நாங்கள் சொல்ல முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.

 'ADMK votes are for us' - DMK joined the list


இந்நிலையில் 'எம்ஜிஆர் ஒரு காலத்தில் திமுகவில் தான் இருந்தார். எனவே அதிமுகவின் ஓட்டு எங்களுக்கு தான் கிடைக்கும். திமுக ஆட்சியில் இரண்டு முறை எம்.ஜி.ஆர் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். எனவே திராவிட கட்சி என்ற அடிப்படையில் அதிமுக ஓட்டுகள் எங்களுக்குத்தான் கிடைக்கும்' என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 'வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை' அப்படி என்றால் எல்லோரும் வந்து அதிமுகவில் சேர்ந்து விட வேண்டியதுதானே. அவருக்கு அடையாளம் கொடுத்தே அதிமுக தான்' எனத் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர், பாமகவை தொடர்ந்து அதிமுக ஓட்டு எங்களுக்குத்தான் என லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது திமுக.

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிமுக பிரமுகர் கொலை; திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
AIADMK leader killed; 8 people including DMK executive arrested

சேலத்தில் அதிமுக பிரமுகர் இரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக செயலாளர் சண்முகம். இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் திடீரென அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் மற்றும் அதிமுகவினர் நிகழ்விடத்திற்கு வந்தனர்.

காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்கக் கூடாது என அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடலை மீட்ட போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

AIADMK leader killed; 8 people including DMK executive arrested

இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வார்டு கவுன்சிலரின் கணவரான திமுக நிர்வாகி சதீஷ் அந்தப் பகுதியில் லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. ஒரு காலத்தில் சண்முகமும் சதீஷும் நெருங்கிய நண்பர்களாக இருந்து லாட்டரி விற்பனை உள்ளிட்ட தொழில்களை செய்து வந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இவர்களுக்குள் தொழில் மற்றும் அரசியல் ரீதியாகவும் போட்டி ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து விரோதிகளாக இருந்து வந்தனர். இந்நிலையில் சதீஷ் தனிப்பட்ட முறையில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததால் அது குறித்து சண்முகம் காவல்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் புகார் தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சதீஷ் அதிமுக நிர்வாகி சண்முகத்தை கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

Next Story

அதிமுக முன்னாள் அமைச்சரின் சிறைத் தண்டனை ரத்து; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Former AIADMK minister Balakrishna Reddy jail sentence cancelled

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 1998 ஆம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இவ்வழக்கில், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார். சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். 

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் நேற்று(3.7.2024) தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், காவல் துறையினரின் விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாகவும், உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அரசுத்தரப்பு கண்டறியவில்லை எனவும், பலவீனமான ஆதாரங்களே உள்ளதாகவும், அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை எனவும் கூறி, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.