செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரைச் சேர்ந்தவர் திருமாறன் (வயது 50). அதிமுக பிரமுகரான இவர், ரியல் எஸ்டேட் மற்றும் மேன் பவர் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (24.04.2021) மறைமலை நகர் முத்துக்குமாரசாமி கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திருமாறன் மீது வெடிகுண்டு வீசி தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தில் கோயில் பிரசாதம் வாங்க வந்த பக்தர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். இந்நிலையில், தப்பி ஓடிய கொலையாளிகளை நோக்கி, திருமாறனுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுட்ட போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் வெடிகுண்டு வீசிய 4 நபர்களில் ஒருவரான சுரேஷ் என்பவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற மூவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குண்டு வீசிக் கொலை செய்யப்பட்ட திருமாறன் மற்றும் சுரேஷ் ஆகியோரது உடல்களைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலை நகர் காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான ராஜேஸ் (வயது 48 ) என்பவர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி திரிவேணி முன்னிலையில் சரண் அடைந்தார்.
அவரிடம் தற்போது நீதிபதி வாக்குமூலம் பெற்று வருகிறார். கொலை செய்யப்பட்ட திருமாறனும் கொலையாளி ராஜேசும் கடந்த பல வருடங்களாக ஒன்றாக ரியல் எஸ்டேட் தொழில் புரிந்து வந்துள்ளனர். ராஜேஷ் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில், 3 கோடி ரூபாயை திருமாறனிடம் தந்து ரியல் எஸ்டேட் தொழில் துவங்குவதற்கு துணை புரிந்ததுடன் தானும் அதில் பார்ட்னராக இருந்துள்ளார். ராஜேஷ் கொடுத்த மூன்று கோடி ரூபாயை திருமாறன் திருப்பித் தர மறுத்தததுடன், அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த ராஜேஷ் முந்திக்கொண்டு திருமாறனை கொலை செய்தார்.