வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கஸ்பா.மூர்த்தி என்பவர் போட்டியிட்டார். இவருக்காக பாமக, தேமுதிக, தமாக கட்சிகள் பம்பரமாக சுழன்று ஓட்டு வேட்டையாடினர். ஏப்ரல் 18ந் தேதி வாக்குப்பதிவு முடிந்த பின்பு கூட்டணி கட்சியினரிடம் ஒப்புக்கு கூட நன்றி எனச் சொல்லவில்லை என்கிற கோபத்தில் அக்கட்சிகளின் நிர்வாகிகள் இருந்தனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில், அதிமுக வேட்பாளர் கஸ்பா.மூர்த்தி, அதிமுக நகர செயலாளர் பழனி உட்பட அதிமுக கட்சி நிர்வாகிகள் 25 பேர் கேரளா, ஊட்டி, கொடைக்கானல் என இன்ப சுற்றுலா சென்ற புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளனர் அதிமுகவினர்.
இதனைப்பார்த்து கடுப்பாகியுள்ளனர் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக நிர்வாகிகள். இதுப்பற்றி நம்மிடம் பேசிய பாமகவை சேர்ந்த ஒருவர், “அதிமுக வேட்பாளர் வெற்றி பெறணும்னு இரவு பகல் பார்க்காம உழைச்சோம். ஆனாலும், தேர்தல் செலவுக்கு கூட கூட்டணி கட்சியான எங்களுக்கு சரியான அளவில் பணம் தரல. ஆனாலும், கூட்டணி தர்மத்துக்காக தீவிரமா உழைச்ச நாங்க வீட்லயிருக்கோம், ஆனா, சரியாவே வேலை செய்யாத அதிமுக நிர்வாகிகளை மட்டும் வேட்பாளர் கஸ்பா.மூர்த்தி இன்ப சுற்றுலா அழைத்து போயிருக்கார். இதுதான் அதிமுக கூட்டணி கட்சிக்கு தர்ற மரியாதை” என்றார். அதிமுக வேட்பாளர், தனது கட்சியினரை மட்டும் இன்ப சுற்றுலா அழைத்து சென்றது அதன் கூட்டணி கட்சியினரை கடுப்பாக்கியுள்ளது.