தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (09/01/2021) காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்கின்றனர். அதேபோல் அ.தி.மு.க. செயற்குழுவில் 302 உறுப்பினர்களும், பொதுக்குழுவில் 3,000 உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.
அமைச்சர்கள், நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 3,500 பேர் பங்கேற்கின்றனர். கூட்டத்திற்கு வரும் அனைவரும் கரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க.வின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் அதிகாரங்களுக்கு ஒப்புதல் தரவும், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு செய்யப்பட்டதற்கும் ஒப்புதல் தரவும் வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் காலை 08.50 மணிக்கு தொடங்கும் என அ.தி.மு.க. தலைமை அறிவித்திருந்த நிலையில், இரண்டு மணி நேரம் தாமதமாகக் கூட்டம் நடக்கவுள்ளது.