கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண சம்பவம் எதிரொலியாகத் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகத் தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். அதன்படி சட்டமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துனைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வருகை வந்துள்ளனர். மேலும் அதிமுகவுக்கு 65 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் அக்கட்சி சார்பில் கள்ளச் சாராய விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கள்ளச்சாராய மரணம் குறித்து விவாதிக்க வேண்டும் என நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் நேற்று (20.06.2024) கூடியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று (21.06.2024) காலை இயற்கை வளங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து மாலையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை) (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை), மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகிய துறையின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவினர் மற்றும் அதிகாரிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பாமக சட்ட மன்ற உறுப்பினர்களும் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.