விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ முருகுமாறன் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக முருகுமாறன் எம்.எல்.ஏ 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், வேட்பாளருமான தொல். திருமாவளவன் எம்.பி 48,363 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை ஆய்வு செய்யக்கோரி திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு தேர்தல் அதிகாரி தரப்பில், நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளில் பலவற்றில் சான்றொப்பம் இல்லை என விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி இன்று (07/02/2020) தீர்ப்பை வழங்கினார். அதில் அதிமுக எம்.எல்.ஏ முருகுமாறன் வெற்றி செல்லும் என்றும், தபால் வாக்குகளை ஆய்வு செய்யக்கோரிய திருமாவளவன் கோரிக்கையை நிராகரித்தும், தொல். திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.