Skip to main content

கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் கலாட்டா!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நேரம் என்பதால் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்குப் பல்வேறு வகையான யுத்திகளைக் கையாண்டு வருகிறார்கள் பெற்றோர்கள். அதேபோல எவ்வளவு பெரிய சிபாரிசுகளுடன் பெற்றோர்கள் வந்தாலும் அதைத் தட்டிக்கழிப்பதற்கான காரணங்களைப் புதுசுபுதுசா கண்டுபிடித்து வருகிறனர் கல்வி நிறுவனங்கள். இந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற சுவரஸ்யமான சம்பவம்.

 

admission

 

திருச்சியில் மிகப்பெரிய கிறிஸ்துவ கல்வி நிறுவனம் அந்தப் பள்ளியில் 550 மதிப்பெண் எடுத்து தனது மகளுக்கு விண்ணப்பிக்கிறார் அந்தப் பெற்றோர். பள்ளியில் சேர்ந்துகொள்ளும்படி குறிப்பிட்ட அறிவிப்பும் செல்போனில் வருகிறது. பள்ளிக்கு அந்த மாணவியும் அப்பாவும் செல்கிறார்கள். அட்மிஷனுக்கு மாணவி மட்டும் அனுமதிக்கப்படுகிறார். மாணவியைப் பார்த்ததும் கல்வி நிறுவன முதல்வர் மாணவியின் மதிப்பெண் சான்றிதழையும் கல்வி சான்றிதழையும் பார்த்தவுடன் கொஞ்சம் முகத்தைச் சுருக்கி கொண்டு, ‘சரிமா நீ வெளியே வெயிட் பண்ணு திரும்பக் கூப்பிடுகிறேன்’ என்று அனுப்பிவிடுகிறார். வெளியே காத்திருந்த கொஞ்ச நேரத்தில் அப்பாவின் செல்போனில் உங்களுக்கு அட்மிஷன் இல்லை என்று மெசேஜ் வருகிறது. உடனே அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த மாணவியின் தந்தை வெளியிருந்த படியே கண்டபடி கத்த ஆரம்பிச்சிட்டார். மூன்று நாளா அலைஞ்சிகிட்டு இருக்கேன் என்று திட்டி அந்த இடத்தையே ரணகளப்படுத்தியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகம் வாட்ச்மேனை அழைத்து அவரை வெளியே அனுப்புங்க என்று உத்தரவு போட, உடனே வாட்சமேன் அந்த மாணவியின் தந்தையை வெளியே தள்ளிவிடுகிறார்.
 

ஆத்திரமும் அழுகையுமாக அவசர போலீசுக்கு தகவல் சொல்ல, உடனே அங்கு வந்த போலீஸ், வாட்சமேனையும் மாணவியின் தந்தையையும் அள்ளிப்போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றது. அங்கு விசாரணையில் வாட்ச்மேன் மீது தவறு என்பதை உணர்ந்த போலீஸ் வாட்ச்மேனை நையபுடைத்தது. இதற்கு இடையில் நிர்வாகம் வாட்ச்மேனை போலீஸ் தூக்கி சென்றதில் அதிர்ச்சியடைந்து, திருச்சியில் உள்ள சீனியர் வழக்கறிஞரிடம் சரண்டர் ஆகி வழக்கறிஞர் மூலம் சமாதனம் பேசி அந்தப் பெற்றோருக்கு சீட்டுக் கொடுக்கிறோம் என்று போலீஸுக்கு தகவல் சொல்லியிருக்கிறார். இவ்வளவு ஆனதுக்குப் பிறகு அந்தச் சீட்டு வேண்டாம். என் புள்ள அங்க படிக்காது என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிட்டராம்.
 

இது திருச்சியில் பாரம்பரியமிக்க இந்து கல்வி நிருவனம் இங்கே சீட்டுக் கிடைப்பது பெரிய கஷ்டம். திருச்சியில் செல்வாக்கு மிகுந்த ஒருவர் தன் மகளுக்கு 6-ம் வகுப்பு சீட்டுத் திருச்சியில் கல்வி அரசு உயர் அதிகாரியிடம் சிபாரிசு கேட்டிருக்கிறார். அந்தக் கல்வி அதிகாரியின் உதவியாளர். அது ஒரு பெரிய பிரச்சனையே இல்ல விடுங்க. அதிகாரியின் உதவியாளர் சிபாரிசு கடிதம் எழுதி அதில் கையெழுத்து போட்டு இதைக் கொண்டு போய்க் கொடுங்க உங்க பொண்ணுக்கு சீட்டு உடனே கிடைச்சுடும் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். அந்தச் செல்வாக்கு மிகுந்த தொழில் அதிபர் இவ்வளவு ஈசியா கிடைக்குதே என்கிற சந்தோஷத்தில் அந்தக் கல்வி நிறுவனத்திற்குச் சென்று சிபாரிசு கடித்தை காட்டியிருக்கிறார்.
 

கடிதத்தைப் பார்த்ததும் சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சொல்லி எம்.டிகிட்ட போனில் பேசி விஷயத்தைச் சொல்லியிருக்கார். உடனே எம்.டி., பொண்ணோட அப்பா கிட்ட போனை கொடுங்க என்று சொல்லி, “சார் நீங்க கொண்டு வந்திருக்கச் சிபாரிசு கடிதத்தில் கல்வி அதிகாரியின் உதவியாளர் கையெழுத்துப் போட்டிருக்கிறார். ஆனா அந்த உயர் கல்வி அதிகாரியே கையெழுத்து போட்டு இது வரை 15 சீட்டுக்கு மேல நான் அட்மிஷன் போட்டுட்டேன். அதுக்கு அவுங்க ஏகப்பட்ட பணம் வாங்கிட்டு தான் சிபாரிசு கடிதம் கொடுத்திருக்காங்க. என்னால இதுக்கு மேல அட்மிஷன் போட முடியாது” என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். பெரிய ஏமாற்றத்துடன் திரும்பினார் அந்தச் செல்வாக்குள்ள செல்வந்தர்.
 

திருச்சியில் அது தான் பெரிய கல்வி நிறுவனம். நடத்த தடுமாறும் சிறிய கல்வி நிறுவனங்கள் பலவற்றை அந்த நிறுவனம் சமீப காலமாக விலைக்கு வாங்கி அந்தப் பழைய நிறுவனங்களின் பெயரிலேயே நடத்தி வருகிறது. இந்த நிறுவனங்களில் கல்வி கட்டணம் ரொம்ப ரொம்ப அதிகம். அந்த நிறுவனங்களில் தான் கல்வி அதிகாரிகளின் குழந்தைகள், காவல்துறை அதிகாரிகளின் குழந்தை என ஏராளமானோர் படிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லாம் சிறப்புச் சலுகையில் கட்டணம். ஏன் இந்தச் சலுகை கட்டணம் என்றால் கல்வி நிறுவனங்களில் ஏதாவது சர்ச்சையோ சிக்கல், தற்கொலை, ஏதேனும் ஏற்பட்டால் எந்தச் சிக்கலும் இல்லாமல் தப்பிக்கதான் இந்த அட்மிஷன்கள் கொடுக்கிறார்களாம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்