நாடு முழுக்க தொடர்ந்து பற்றி எரியும் விவகாரமாக உள்ளது குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான நடக்கும் போராட்டங்கள். இந்த நிலையில் தமிழகத்திலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. சில பகுதிகளில் தொடர் போராட்டமாகவும் இது நடந்து வருகிறது.
அப்படித்தான் திருப்பூர் மாவட்டம் திருப்பூரில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. திருப்பூரிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் செல்லாண்டியம்மன் கோவில் அருகே அங்குள்ள சிறுபான்மையினர் அவர்களது தனிப்பட்ட இடத்தில் தொடர்ந்து 20 நாட்களாக குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும் அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் போராடி வருகிறார்கள். இந்த தொடர் போராட்டத்திற்கு திமுக உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் அதன் நிர்வாகிகள் ஒவ்வொரு நாளும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அப்படித்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் எம்பி கே சுப்பராயன் போராட்டக் களத்திற்கு சென்று குடியுரிமை திருத்த சட்ட மசோதா மக்கள் மத்தியில் எவ்வளவு பிளவை உண்டாக்கிறது என பேசி இந்த போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் என கூறி வந்தார்.
இந்த நிலையில் திருப்பூரில் உள்ள இந்து வழக்கறிஞர்கள் அமைப்பு என்ற ஒரு அமைப்பு அதில் உள்ள ஏழு பேர் திருப்பூர் மாநகர காவல்துறை கமிஷனரிடம் கம்யூனிஸ்டு எம்பி சுப்பராயன் போராட்டத்தை தூண்டி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஆகவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார்கள்.
கம்யூனிஸ்டு எம்பி மீது இந்து முன்னணி அமைப்பு கொடுத்துள்ள புகார் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.