திருவாரூர் அருகே கஜாபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரபட்சமின்றி அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசு பாரபட்சமாக நிவாரணம் வழங்கி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே குன்னியூர் ஊராட்சியை சோ்ந்த கிராமமக்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண பொருட்கள் ஒரு பகுதியினருக்கு மட்டும் வழங்கப்பட்டு விட்டு பலருக்கும் வழங்கப்படவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து குன்னியூர் ஊராட்சியில் உள்ள பல்வேறு கிராமங்களை சோ்ந்த 200க்கும் மேற்பட்ட திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவூர் கடைவீதி அருகில் பாகுபாடின்றி நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி திமுக ஒன்றிய செயலாளர் தேவா தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் குறித்து தகவல்யறிந்த காவல்துறையினர் மற்றும் வட்டாச்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விரைவில் நிவாரண பொருட்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தொிவித்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.