![cow](http://image.nakkheeran.in/cdn/farfuture/rm5vocp-71p9oBUTjwbtAOr-v8Mdmf4VgykfyYgx3iA/1533347644/sites/default/files/inline-images/cow.jpg)
திருச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியான தொட்டியம் தவுட்டுபாளையம் காட்டுப்புத்தூர் அருகே மாட்டு வியாபாரியின் பண்ணையில் 14 மாடுகள் மர்மமான முறையில் இறந்தது. மாடுகளை விஷ ஊசி போட்டு கொன்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்.
தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூரை அடுத்த ஆலாம்பாளையம் புதூர் தவிட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் வளர்ப்பு மாடுகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். தவிட்டுப்பாளையம் அருகே உள்ள ஆலாம்பாளையம் புதூரில் இவருக்கு சொந்தமான பண்ணையில் மாடுகளை கட்டிப்போட்டு பாதுகாப்பது வழக்கம். நைனாமலை சந்தையில் விற்பதற்காக சுமார் 16 மாடுகளை கந்தசாமி தனது பண்ணையில் கட்டிப்போட்டு பாதுகாத்து வந்தார்.
![cow](http://image.nakkheeran.in/cdn/farfuture/LG1TB7_ew0NPDXYhmE3krwTvL4K4dr5rEDc0urrF0Eg/1533347624/sites/default/files/inline-images/Cow%20death.jpg)
இரவு மாடுகளுக்கு வைக்கோல் மற்றும் தண்ணீர் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அடுத்த நாள் காலை வந்து பார்த்த போது ஒரு பசு உள்பட 14 கன்று குட்டிகள் இறந்து கிடந்தது. இரண்டு பசுங்கன்றுகள் உயிருக்குப் போராடிய படி கிடந்தது. இதனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கந்தசாமி காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸபெக்டர் செந்தில்குமார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காட்டுப்புத்தூர் கால்நடை மருத்துவர்கள் முசிறி கால்நடை உதவி இயக்குநர் சையது முஸ்தபா, கால்நடை மருத்துவர் செல்வக்குமார் ஆகியோர் இறந்த மாடு மற்றும் கன்று குட்டிகளை உடற்கூறு பரிசோதனை செய்தனர். இச்சம்பவம் குறித்து கந்தசாமி கூறும்போது தொழில் போட்டி காரணமாக மாடு மற்றும் கன்றுக்குட்டிகளின் தலையில் அடித்தும், விஷ ஊசி போட்டும் கொன்றுள்ளனர். மாடுகளை இரக்கமின்றி கொன்ற மர்ம நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.