திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் கோட்டை வளாகத்தில் மனோன்மணியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரையடி உயர பச்சை நிற மரகத லிங்கம் இருந்தது. இந்த கோவிலில் சண்முக சிவாச்சாரியார் இருவேளையும் பூஜைகள் நடத்தி வந்தாராம். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி காலையில் கோவிலில் இருந்த அந்த பச்சை மரகத லிங்கம் திருடப்பட்டது. கோவில் நடையை திறந்து பார்த்தபோது பச்சை லிங்கம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் தங்கத்தாலி, வெள்ளியாலான ஒட்டியானம், கிரீடம் உள்ளிட்டவையும் கொள்ளையடிக்கப்பட்டன. கோவில் கருவறையில் மரகதலிங்கத்தை கோவில் சுவரை துளையிட்டு கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கை அப்போதே திருவண்ணாமலை மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொள்ளை குறித்த எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோவில் நிர்வாகிகள் வேட்டவலம் ஜமீனில் பணிபுரியும் சிலரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஜமீன் ஊழியரான பச்சையப்பன் என்பவர் காணாமல் போன மரகத லிங்கம் பங்களாக வளாகத்திலுள்ள குப்பை தொட்டியில் கிடப்பதாக கூற இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மரகத லிங்கத்தை மீட்டனர்.
திருடப்பட்ட மரகத லிங்கம் அதே பங்களா வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் குப்பை தொட்டியில் வீசி சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் 1986 லும் இதே மரகத லிங்கம் காணாமல் போக ஒரே வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.