தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக தொழில்துறை அமைச்சரும், கடலூர் சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளருமான எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்களான அம்மா பேரவையின் பொருளாளர் மதியழகன், அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு பாலகிருஷ்ணன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், கடலூர் ஒன்றியப் பெருந்தலைவர் பக்கிரி, அ.தி.மு.கவின் முக்கியப் பிரமுகரும், ஒப்பந்ததாரருமான சுரேஷ் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று (18/03/2021) காலை 11.00 மணி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வன், மதியழகனுக்கு சொந்தமான இடத்தில் 8 மணி நேரம் சோதனை நடந்த நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது. இருப்பினும், அ.தி.மு.க. பிரமுகர்கள் சுரேஷ், சரவணன், பாலகிருஷ்ணன் வீடுகளில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வருமான வரித்துறையினரின் சோதனை, அ.தி.மு.க.வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.