சேலத்தில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி, அ.தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட மூவர், 28 லட்சம் ரூபாய் சுருட்டி விட்டதாக புகார் கிளம்பியுள்ளது.
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி (34), பெரமனூரைச் சேர்ந்த சத்யஜோதி (29), அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த சபிதா (30) ஆகிய மூவரும் சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர் மதிவாணனிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது: சேலம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் நாங்கள் கடந்த 2017ம் ஆண்டு தினக்கூலி அடிப்படையில் கணினி தொழில்நுட்பப் பணியாளர்களாக வேலைக்குச் சேர்ந்தோம். இதற்காக அப்போது தலைவராக இருந்த சதீஸ்குமார், செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் எங்களிடம் தலா 3 லட்சம் ரூபாய் வாங்கினர்.
அதன் பின்னர் தொகுப்பூதிய பணியாளர்களாக எங்களை பணியில் அமர்த்தினர். பிறகு, அவர்கள் இருவரும், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் பணி நிரந்தரம் செய்து விடலாம் என்று ஆசை காட்டினர். அப்போது தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் தலைவராக இருந்த இளங்கோவன் ஆகியோர் எங்களுக்கு நெருக்கமானர்கள் என்றும் கூறினர். இந்த சங்கத்தின் தலைவர் சதீஸ்குமார், அதிமுக கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்ததால், அவர்கள் சொன்னதை நம்பினோம்.
இதையடுத்து நாங்கள் பலரிடம் கடன் பெற்றும், எங்கள் நகைகளை அடமானம் வைத்தும் சதீஸ்குமார், ரவிச்சந்திரன், சதீஸ்குமாரின் மனைவி சங்கீதா ஆகியோரிடம் சில தவணைகளாக பணத்தைக் கொடுத்தோம். ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. இதனால் நாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி தொடர்ந்து கேட்டு வந்தோம். அவர்கள் பணத்தைத் திருப்பித் தர முடியாது என மிரட்டியதோடு, எங்களிடம் வெற்றுத்தாளில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் சேலம் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் தலைவராக இருந்த சதீஸ்குமாரின் பதவிக்காலம் முடிந்து போனது. பணத்தைத் தர முடியாது என்று கூறியதோடு, இதுகுறித்து வெளியே யாரிடமாவது சொன்னால் அரசியல் செல்வாக்கைப் பயன்டுத்தி என்ன வேண்டுமானாலும் செய்து விடுவோம் என்றும் மிரட்டுகின்றனர். அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். மேலும் எங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளனர்.
புகார்தாரர்கள் மேலும் கூறுகையில், நாங்கள் கொடுத்த பணத்தை சதீஸ்குமாரும், ரவிச்சந்திரனும் மாநில கூட்டுறவு இணையத்தின் தலைவராக இருந்த இளங்கோவனிடம் கொடுத்துவிட்டதாகவும், அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்போதுதான் எங்களால் பணத்தைத் தர முடியும் என்றும் கூறியதாகவும் சொல்கின்றனர். இவர்களில் சத்தியஜோதி, சபிதா ஆகியோர் தலா 10 லட்சம் ரூபாயும், மகேஸ்வரி 8 லட்சம் ரூபாயும் வேலைக்காக கொடுத்துள்ளனர்.
இந்த புகார் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி சேலம் நகர காவல்துறை உதவி ஆணையர் வெங்கடேசனுக்கு, துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். புகாரில் சிக்கியுள்ள சதீஸ்குமார், தற்போது சேலம் மாநகர எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் பதவியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த மோசடியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 'நிழல்' எனச் சொல்லப்படும் இளங்கோவனின் பெயரும் அடிபடுவதால், இந்தப் புகார் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.