கஜா புயலின் கோரத்தாண்டவத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வர குறைந்தது 20 வருடங்களுக்கு மேல் ஆகும் என்கிறார்கள் அப்பகுதிகளை பார்வையிட்டு வந்தவர்கள். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிதிகள் போதாது என்பதை அறிந்த பல தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் கஜா புயல் நிவாரணத் தொகையாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் 5 கோடி பணத்தை சேர்ப்பித்தார் கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபரான மார்டின். அவரது மனைவி, லீமா ரோஸ், மகன் சார்லஸ் மார்டின், மருமகள் சிந்து சார்ல்ஸ் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து காசோலையை வழங்கினர். இது மட்டுமல்லாமல் 3 கோடிக்கு பொருள் கொடுத்துள்ளார் தனி மனிதனாக கஜா புயல் நிவாரணப் பங்களிப்பில் மார்டின் தான் முதலிடம் என்கிறார்கள்.
இது முதல் முறை அல்ல. ஏற்கனவே 2015 சென்னை வெள்ளத்தின் போது 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மக்களுக்குக் கொடுத்துள்ளார். அதே போல சமீபத்தில் ஏற்பட்ட கேரளா வெள்ளத்தின் போது 50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை நேரடியாக கொடுத்தது மட்டுமல்லாமல் 25 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிதிக்கு வழங்கினார். லாட்டரி அதிபர் என்று அறியப்பட்டவர் கோவை மார்ட்டின். இந்தியாவிலேயே அதிக வருமான வரி கட்டிய தனி மனிதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் லாட்டரி தடை செய்யப்பட்டபின் கேரளா மற்றும் வடமாநிலங்களில் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தினார். கலைஞர் கதை வசனம் எழுதி பா.விஜய் நடத்திய 'இளைஞன்' படத்தை இவர் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இவர் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கஜா புயல் எதிர்பார்த்ததற்கு மேலான இழப்பை ஏற்படுத்தியபோது அரசு செயல்படுவதற்கு முன்னரே தன்னார்வலர்கள் செயல்பட தொடங்கிவிட்டனர். காலத்திற்குச் சென்று மக்கள் கைகொடுக்கத் தொடங்கினர். ஆனாலும் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் வழங்கும் நிதி அடுத்த கட்ட பணிகளுக்குப் பேருதவியாக இருக்கும். அந்த வகையில் பல நிறுவனங்களின் பங்களிப்பு அரசைச் சென்று சேர்ந்தது. அதில் பிரபல நிறுவனங்களான சக்தி மசாலா நிறுவனம் 1 கோடி ரூபாய், லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் 1 கோடி ரூபாய், லைகா நிறுவனம் 1 கோடியே 1 லட்சம் ரூபாய், சன் டிவி நிறுவனம் 2 கோடி ரூபாய், டிவிஎஸ் நிறுவனத்தின் வேணு ஸ்ரீனிவாசன் 2 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். இந்த வரிசையில் முதல்வரிடம் 5 கோடி ரூபாய்க்கான காசோலையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 கோடி மதிப்புள்ள பொருட்களும் கொடுத்து முதலில் நிற்கிறார் கோவை மார்டின்.