Skip to main content

இ.பி.எஸ்.க்கு சவால் விடுத்த அதிமுக முன்னாள் நிர்வாகி!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
ADMK exexecutive challenged EPS

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாச்சலம் மீது சேலம் அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி. ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதில், “எம்எல்ஏவாக இருந்த வெங்கடாசலம் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றியுள்ளார். அரசு வேலைக்காக தான் வசூலித்து கொடுத்த ரூ.40 லட்சத்தை திருப்பி தராமல் வெங்கடாச்சலம் ஏமாற்றுகிறார்’ எனத் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏ.வி.ராஜுவை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில், “கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் சேலம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ஏ.வி. ராஜு இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏ.வி.ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கட்சியில் இருந்து என்னை நீக்கியது என்பதே செல்லாது என்பது தான் என்னுடைய வாதம். கட்சியின் சட்டம் பற்றிக் கூட தெரியாத ஒருவர் பொதுச் செயலாளராக செயல்படுகிறார் என்பது தான் என்னுடைய வருத்தம். நான் ஒரு மாதத்துக்கு முன்னாடி என்னுடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டேன். ஆனால் கடிதம் கொடுத்துள்ளீர்களா என்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். கட்சியிலிருந்து நீக்குவது என்றால் ஒரு முறை இருக்குகிறது. ஒருவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டுமானால் என்றால் ஒரு விதிமுறை இருக்கிறது. அதன்படி தான் நீக்க முடியும். குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

நான் தான் கையெழுத்திட்டு எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக்கி உள்ளேன். எடப்பாடி பழனிச்சாமியால் தமிழகத்தில் இருந்து இரண்டு மாவட்ட செயலாளர்களை நீக்க முடியுமா. அவ்வாறு நீக்கினால் எடப்பாடி பழனிசாமியின் பதவி போய்விடும். எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் புறக்கணிக்கப்பட்டிருந்தபோது கொடநாட்டில் ஜெயலலிதாவை சந்தித்தேன். அப்போது எடப்பாடி பழனிசாமி கொடுத்த மூன்று புகைப்படங்களை ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றனிடம் ஒரு போட்டோவையும், ஜெயலலிதாவிடம் இரு புகைப்படங்களையும் கொடுத்தேன், அந்த புகைப்படத்தை வாங்கிய ஜெயலலிதா அதனைத் தூக்கி ஏறிந்து இதனை எதற்கு கொண்டு வந்தீர்கள் என கேட்டார். இதனை எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டாரா. எடப்பாடி பழனிசாமி பால் பண்ணையில் இயக்குநராக இருந்தபோது செய்த ஊழல் பட்டியல் தரட்டுமா” என கேள்வி எழுப்பியுள்ளார். 

சார்ந்த செய்திகள்