சேலம் மாநகர ஜெயலலிதா பேரவை இணை செயலாளராக இருந்தவர் சேகர். சேலம் மாநகராட்சித் தேர்தலில் 4- வது வார்டில் போட்டியிட தன் மனைவி மகேஸ்வரிக்கு அ.தி.மு.க. தலைமையிடம் சீட் கேட்டிருந்தார். ஆனால் கட்சித் தலைமையோ, அண்மையில் பா.ம.க.வில் இருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்த சாம்ராஜ் என்பவரின் மனைவி சொர்ணாம்பாளுக்கு சீட் கொடுத்தது.
இதனால் அதிருப்தி அடைந்த சேகர், 4- வது வார்டில் தன் மனைவி மகேஸ்வரியை சுயேட்சையாக களமிறக்கினார். இந்த தேர்தலில் மகேஸ்வரி சேகர் 300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 4- வது வார்டில் தி.மு.க.வுக்கு இரண்டாவது இடம் கிடைத்தது. அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட சொர்ணாம்பாள் மூன்றாம் இடம் பிடித்தார்.
வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு தேர்தல் நடத்தும் அலுவலரும், சேலம் மாநகராட்சி ஆணையருமான கிறிஸ்துராஜிடம் வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார் மகேஸ்வரி. வாக்கு எண்ணிக்கை மையத்திலேயே மகேஸ்வரியின் கணவர் சேகர், எடப்பாடி பழனிசாமி மீதும், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் வெங்கடாசலத்தின் மீதும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.
இது தொடர்பாக நக்கீரன் செய்தியாளரிடம் சேகரும், அவருடைய மனைவியும் கூறியதாவது, நானும், எங்கள் குடும்பமும் கடந்த நாற்பது ஆண்டு காலமாக அ.தி.மு.க.வில் இருந்து வருகிறோம். கட்சிக்காக உண்மையாக உழைத்து இருக்கிறோம். இந்நிலையில் சேலம் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில், நான்காவது வார்டில் போட்டியிட வாய்ப்பு கேட்டு முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் காலில் பலமுறை விழுந்திருக்கிறேன்.
ஒவ்வொருமுறை கேட்கும்போதும், நான்காவது வார்டு பற்றி இன்னும் டிஸ்கஸன் பண்ணலப்பானு சொல்லி அனுப்பி வெச்சிடுவாரு. தேர்தலுக்கு 15 நாள்களுக்கு முன்பு, பாமகவைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவர் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருடைய மனைவி சொர்ணாம்பாளுக்கு கவுன்சிலர் தேர்தலில் சீட் தந்துள்ளனர். காலங்காலமாக கட்சிக்காக உழைத்த எனக்கு சீட் தராதது ஏமாற்றமாக இருந்தது. இந்த அதிர்ச்சியில் எனக்கு நெஞ்சு வலி வந்து, ஆஞ்சியோகிராம் சிகிச்சை வரை சென்றது.
ஊர் மக்கள் எல்லாரும் ஒன்றுகூடி எங்களை போட்டியிட சொன்னார்கள். அதன்பேரில் 4- வது வார்டில் என் மனைவி மகேஸ்வரியை சுயேட்சையாக போட்டியிட வைத்தேன். எடப்பாடி பழனிசாமி, வெங்கடாசலம் என்று எத்தனை பேர் காலில்... எத்தனை முறைதான் போய் விழுவது... எங்களை ஒரு மனுஷனா கூட எடப்பாடி பழனிசாமி மதிக்கவில்லை.
தொண்டர்களுக்கு மரியாதை தருவதாக மேடைக்கு மேடை பேசுகிறார்களே தவிர, நிஜத்தில் அப்படி இல்லை. கட்சிக்காக உழைத்த எத்தனை தொண்டர்களுக்கு சீட் கொடுத்திருக்கிறார்கள் என்பதை சொல்லச் சொல்லுங்கள்.
அ.தி.மு.க. சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலமும், சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூவும், கூட்டு சேர்ந்து கொண்டு, கட்சியை அழிப்பதற்கான வேலைகளைச் செய்து வருகின்றனர். ஏ.வி.ராஜூ, ஒன்றியத்தோடு வேலைகளை வைத்துக் கொள்ள வேண்டும். 4- வது வார்டில் அவருக்கு என்ன வேலை? சும்மா இருந்த பா.ம.க. சாம்ராஜை கட்சிக்குள் கொண்டு வந்து, எனக்கு சீட் கிடைக்காமல் செய்து விட்டனர்.
பணம் கொடுப்பவர்களுக்குத்தான் அ.தி.மு.க.வில் சீட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதெல்லாம் எடப்பாடிக்கு தெரியுமா என்று கூட தெரியவில்லை.
என் மனைவியை சுயேச்சையாக போட்டியிட வைத்ததால், உடனடியாக அ.தி.மு.க.வில் இருந்து எங்களை நீக்கி விட்டனர். மக்கள் மத்தியில் எங்களுக்கு செல்வாக்கு கூடியதை அடுத்து, தேர்தலில் இருந்து வாபஸ் பெறச்சொல்லி பகுதி செயலாளர் சரவணன் 25 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசினார். அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
வார்டில் உள்ள பொதுமக்கள், என் மனைவியை பொது வேட்பாளர் போல கருதினர். அதனால்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற முடிந்தது. நான்காவது வார்டில் அ.தி.மு.க.வுக்கு மூன்றாம் இடம்தான் கிடைத்தது.
இவ்வாறு சேகர், அவருடைய மனைவி மகேஸ்வரி ஆகியோர் கூறினர்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூவிடம் கேட்டபோது, ''சேலத்தைப் பொருத்தவரை வேட்பாளர்கள் இறுதிப்பட்டியலை எடப்பாடியார்தான் முடிவு செய்தார். உண்மையைச் சொல்லப்போனால் சேகரின் மனைவிக்கு சீட் கொடுக்கும்படி மாவட்டச் செயலாளரிடமும், பகுதி செயலாளரிடமும் நான் பரிந்துரை செய்தேன். இந்த உண்மை பலருக்கு தெரியாது. சேகர் என்னைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு இப்படி பேசுகிறார். அந்த வார்டில் பொறுப்பாளர் மெடிக்கல் ராஜாதானே தவிர நான் இல்லை,'' என்றார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் எல்லாமே பண மயமாகி விட்ட என்ற காத்திரமான விமர்சனங்கள் கிளம்பியுள்ள நிலையில், ஜெ., பேரவை நிர்வாகியும் பணம் கொடுப்பவர்களுக்குத்தான் சீட் என்ற விமர்சனத்தை முன் வைத்திருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் மேலும் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.