கடந்த மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (04/07/2022) விசாரணைக்கு வரவிருக்கிறது.
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் கடந்த ஜூன் மாதம் 23- ஆம் தேதி அன்று நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து, சண்முகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், 23 தீர்மானங்களை முன்வைத்து எந்த முடிவையும் எடுக்கலாம் என்றும், மற்ற விவகாரங்களை ஆலோசிக்கலாமே தவிர முடிவெடுக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுக்களில் நிரந்தர தலைவராக தமிழ் மகன் உசேன் நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அதை நீதிமன்றத்தின் செயலை அவமதிப்பதாகக் கருதி எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரைத் தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், வரும் ஜூலை 11- ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், இவ்வழக்கு இன்று (04/07/2022) விசாரணைக்கு வரவுள்ளது.