பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சிரோமணி அகாலி தள கட்சியின் ஆட்சி நடைபெற்றது. இந்த ஆட்சிக் காலத்தில் அக்கட்சித் தலைவரான பிரகாஷ் சிங் பாதல் என்பவர் முதல்வராக பணியாற்றி வந்தார். அச்சமயத்தில், அவரது மகன் சுக்பீர் சிங் பாதல் துணை முதல்வராக பணியாற்றினார். இத்தகைய சூழலில் தான் பிரகாஷ் சிங் பாதல் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற சீக்கிய மதத்துக்கு எதிரான தவறுகளுக்காக, சுக்பீர் சிங் பாதலுக்கு, சீக்கியர்களின் அதிகார பீடமான அகால் தக்த் தலைவர் கியானி ரக்பீர் சிங் நேற்று முன்தினம் (02.12.2024) மத ரீதியான தண்டனையை வழங்கினார்.
அதில், அக்கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் சேவகராக தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டார். பஞ்சாப்பில் 5 முறை முதல்வராக பதவி வகித்த மறைந்த பிரகாஷ் சிங் பாதலுக்கு வழங்கப்பட்ட ‘ஃபக்ரே-ஏ-கெளம்’ என்ற பட்டத்தைத் திரும்ப பெறப்படுவதாக கியானி ரக்பீர் சிங் தெரிவித்தார். இந்த தண்டனையை ஏற்ற சுக்பீர் சிங் பாதல், அக்கட்சியின் தலைவர் பதவியை நேற்று (03.12.2024) ராஜினாமா செய்தார். அதோடு சக்கர நாற்காலியில் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு வந்தார். இதனையடுத்து, அவர் பொற்கோயிலில் உள்ள பாத்திரங்கள், காலணிகள், குளியலறைகள், கழிவறைகள் போன்றவற்றைச் சுத்தம் செய்து தூய்மை பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றும் (04.12.2024) பொற்கோயில் நுழைவாயிலில் சுக்பீர் சிங் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்திய நபரை பிடித்துத் தடுத்தனர். இதனால் துப்பாக்கி குண்டு அவர் மீது படாமல் நல்வாய்ப்பாகக் குறி தவறியது. சுக்பீர் சிங் பாதல் உட்பட அக்கட்சியினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபரை அங்கிருந்தவர்கள் பிடித்துக்கொண்டனர். மேலும் இது தொடர்பாக “இந்த துப்பாக்கி சூட்டால் யாராவது காயமடைந்தார்களா” என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பஞ்சாப் ஏ.டி.சி.பி. ஹர்பால் சிங்கிடம் கேட்டபோது அவர், “இல்லை” எனத் தெரிவித்தார்.