சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த ஆண்டு டிசம்பர் 9- ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தற்கொலை என வழக்குப் பதிவுசெய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, ஹேம்நாத்தைக் கைது செய்தனர்.
இந்த வழக்கில், டிசம்பர் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஹேம்நாத் தனது மனுவில் ‘தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக் கூடாது எனக் கூறி, சித்ரா மீது சந்தேகம் கொண்டதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக, எனக்கு எதிராகக் காவல்துறையினர் கூறும் குற்றச்சாட்டு பொய்யானது. கடந்த ஆகஸ்ட் மாதம், நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். என்னுடனும் எனது குடும்பத்தினருடனும் சித்ரா அன்போடு பழகியதை அவரது தாய் விரும்பவில்லை. எனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. எந்தக் குற்றமும் செய்யாததால், எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், ஜாமீன் கோரிய ஹேம்நாத்தின் வழக்கு இன்று (15/02/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத்தைக் கைதுசெய்து 60 நாட்களாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், ஹேம்நாத்துக்கு சட்டப்பூர்வ ஜாமீனை வழங்கிய உயர்நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஹேம்நாத் மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதித்துள்ளது.