சென்னை கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனைய கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு தொடர்புடைய அனைத்து கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவுப் பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டு வருகிறது.
திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) நாளை (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் எனப் போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும்போது விழுப்புரம் கோட்ட பேருந்துகள் மட்டும் தாம்பரம் வரை இயக்கப்படும். அதே சமயம் மீண்டும் தென்மாவட்டங்களுக்கு கிளம்பும் அரசுப் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே புறப்படும் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தை காலி செய்வது குறித்துப் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. அதில் கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தை லூலூ மால் கட்டுவதற்கு அரசு கொடுக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. தற்பொழுது இதனைத் தமிழக அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வீட்டு வசதி துறை செயலாளர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கோயம்பேடு பேருந்து நிலையத்தை காலி செய்து அந்த இடத்தில் லூலூ மால் அமைக்க அரசு இடம் தரப் போவதாக பரவும் செய்தி வதந்தி. அடிப்படை ஆதாரமற்ற தகவலை நம்பி கட்சியினர் சிலரும், தனி நபர்களும் வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் தவறானது. ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயலாகும்' எனத் தெரிவித்துள்ளார்.