பிரபல நாவலாசிரியரும் எழுத்தாளருமான லதா சரவணன், எழுதி பாவைமதி பதிப்பகம் வெளியிட்ட ’காலநதியில் சித்திரப்பாவைகள்’ என்ற வாழ்வியல் நூலின் வெளியீட்டு விழா 15.7.2019 மாலை, சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யாபவனில் சிறப்புற நடந்தது. இந்த நூல், திருநங்கையரின் வாழ்வியல் காயங்களைச் சொல்லும் அனுபவக் கதைகளின் தொகுப்பாகும். அதனால் ஏராளமான திருநங்கையரும், பொதுமக்களும், இலக்கிய அன்பர்களும், ஊடகத்துறையினரும் பெருமளவில் திரண்டிருந்தனர்.
குத்துவிளக்கேற்றும் வைபவத்துடன் விழா தொடங்கியது. எழுத்தாளர் கமலக்கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தியதோடு நிகழ்சியையும் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். கவிஞர்கள் அஸ்வின், பெருமாள் ஆச்சி, அமுதா தமிழ்நாடன் ஆகியோர் திருநங்கையர் பற்றிய தங்கள் கவிதைகளை வழங்கினர்.
அடுத்து லதா சரவணனின் ‘காலநதியில் சித்திரப்பாவை’ நூலை ஓய்வுபெற்ற நீதியரசர் வள்ளிநாயகம் வெளியிட, அதை பதிப்பாளர் முனைவர் பாட்டழகன் பெற்றுக்கொண்டார். ’கைத்தடி பதிப்பகம்’ கவிஞர் நாஞ்சில் இன்பா, தனது கவிதை நடைச் சொற்பொழிவால், நூலைத் திறனாய்வு செய்தார். அடுத்து விழாவின் சிறப்பு அழைப்பாளரான நடிகர் எஸ்.வி.சேகர், லதாவின் எழுதும் வேகத்தைப் பாராட்டிவிட்டு ”‘இலவச பேருந்துப் பயணம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை ஆட்ட்சியாளர்கள் திருநங்கையருக்கு வழங்கவேண்டும் என்று குரல்கொடுத்தவன் நான். திரைபடத்தில் இவர்களை கேலிக்குரியவர்களாக சித்தரிக்கிறார்கள். அந்த சித்தரிப்பிற்கும் இவர்களின் நிஜ வாழ்க்கையும் நிறைய வேறுபாடு உண்டு. இவர்கள் நம் சக மனிதர்கள் என்ற எண்ணம் நமக்கு வேண்டும்” என்றார். கூடவே ’பான் டு வின்’ அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் ரூபாயைத் தான் வழங்குவதாக அறிவித்தார்.
திரைப்படத் தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பனோ ‘ஒவ்வொரு மனிதருமே ஒரு நேரத்தில் ஆணாகவும் ஒரு நேரத்தில் பெண்ணாகவும் வெளிப்படுவாரகள். அது இயல்பு. இவர்கள் எந்த வகையிலும் தாழ்ந்தவர்கள் அல்ல. எனவே திருநங்கையரை நம்மிடமிருந்து பிரித்துப் பார்க்கக்கூடாது. அவர்கள் நம்மில் ஒருவர்” என்றார் அழுத்தமாய்.
மதிப்பிற்குரிய மங்கை பானு தன் பேச்சில் “எங்களுக்கு யாரும் இரக்கம் காட்டத் தேவையில்லை. உங்களில் ஒருவராக மதித்தால் போதும். மூன்றாம் பால் என்று எங்களைப் பிரிக்காதீர்கள். தனிமைப்படுத்தாதீர்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
நூலை வெளியிட்ட நீதியரசர் வள்ளிநாயகம் ‘திருநங்கையரின் வாழ்க்கைத் தரம் வேதனை தருவதாக இருக்கிறது. அவர்கள் அவர்களுக்கான உரிமையைப் பெறவேண்டும். அவர்கள் எந்தவகையிலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்ல. அவர்களை நம்மிடமிருந்து பிரித்துப்பார்க்கக் கூடாது. அவர்கள் நம்மிள் ஒருவர்” என்றார் ஆழ்ந்த பார்வையோடு.
லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் லதாவின் எழுத்தாற்றலைப் பாராட்டிவிட்டு சாதனைகள் மூலம் திருநங்கையர்கள் தங்கள் ஆற்றலை நிரூபித்து வருகிறார்கள் என்றார். ம.தி.மு.க. மல்லை சத்யாவோ சுவையான குட்டிக தைகளைச் சொல்லி, இன்று பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்திருப்பது குறித்த தன் கவலையை வெளியிட்டார். திருநங்கையருக்காக தங்கள் இயக்கம் தொடர்ந்து குரல்கொடுத்து வருவதையும் அவர் பதிவு செய்தார்.
நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் தன் உரையில் ”திருநங்கையரின் சமூக நீதிபோராட்டம் ஆண்டாண்டுகாலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இருட்டிலேயே இருந்த திருநங்கையருக்குக் கலைஞர் ஆட்சிக்காலத்தில் வாரியம் உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு, அவர்கள் விடியலை நோக்கிப் பயணிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. இவர்கள் தங்கள் உரிமையைச் சட்டத்தின் துணையோடு நிலைநாட்ட வேண்டும். அதுதான் நிலையான தீர்வைத் தரும்’ என்றார் அழுத்தம் திருத்தமாய்.
’காலம் தோறும் திருநங்கையருக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது சங்ககால இலக்கியங்களும் அவர்களை இழிவு செய்கின்றன. அறவெளிச்சத்தை ஏந்திய வள்ளுவன் கூட திருநங்கையரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை. லதா சரவணன் போன்றவர்களின் எழுதுகோல் அவர்களுக்காகப் பிராயசித்தம் தேடும் வகையில் எழுதுகின்றன. காயம்பட்டவர்களுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் எழுக்தப்படும் எழுத்தே தலைசிறந்த எழுத்து’ என்றார், நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன்.
இதைத்தொடர்ந்து விதைக்காவலர் வானவன் மழை நீர் சேமிப்பு குறித்து பேசினார். நூலாசிரியர் லதா சரவணனின் ஏற்புரைக்குப் பின் வடசென்னைத் தமிழ் இளைஞர் கழகப் பொறுப்பாள்ர் பன்னீர்செல்வம் நன்றியுரை வழங்கினார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் லதா சரவணன் விருதுகளையும் நினைவு பரிசுகளையும் வழங்கிச் சிறப்பித்தார்.
விழாவில் பாவையர் மலர் ஆசிரியர் வான்மதி, ’பார்ன் டு வின்’ ஸ்வேதா, ராணி இதழ் ஆசிரியர் ராமகிருஷ்ணன், ஒன் இண்டியா ஆசிரியர் அறிவழகன், மா.க.சிவஞானம், எழுத்தாளர் லதா, முனைவர் நா.நளினிதேவி, கவிஞர் கன்னிக்கோயில் ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களையும் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியிருப்பதோடு திருநங்கையரின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் எழுத்தாளர் லதா சரவணன், பலரின் கவனத்தையும் பாராட்டுதல்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறார். அரங்கில் வைக்கப்பட்டிருந்த அவரது மகள்களான அனிதா, அபிநயா ஆகியோரின் பென்சில் ஓவியங்களும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றன.
-சூர்யா