மாணவர்களை தாக்கிய நடிகையும், பா.ஜ.க பிரமுகருமான ரஞ்சனாவுக்கு நிபந்தனையின் பேரின் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை போரூர் - குன்றத்தூர் சாலையில் நேற்று முன்தினம் சென்னை மாநகரப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி அபாயகரமாக மாணவர்கள் பயணித்தனர். அப்போது பேருந்தை நிறுத்திய நடிகையும், பா.ஜ.க பிரமுகருமான ரஞ்சனா, பேருந்திலிருந்து பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாகக் கீழே இறக்கிவிட்டு அவர்களைத் தாக்கினார். மேலும், படிக்கட்டில் பயணித்த மாணவர்களைக் கண்டிக்கவில்லை என்று கூறி பேருந்தின் நடத்துநரைத் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதனை தொடர்ந்து, பள்ளி மாணவர்களைத் தாக்கிய புகாரில் ரஞ்சனா கைது செய்யப்பட்டார். அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களைத் தாக்கியது, ஆபாசமாகப் பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த மாங்காடு போலீசார் நடிகை ரஞ்சனாவை கைது செய்தனர்.
இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நடிகை ரஞ்சனா மாங்காடு காவல் நிலையத்தில் 40 நாள் காலை மற்றும் மாலை கையெழுத்திடுமாறு கூறி நிபந்தனையின் பேரில், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.