Skip to main content

நடிகர் வடிவேலு - நில உரிமையாளர் இடையே சமரசம் 

Published on 27/07/2018 | Edited on 27/07/2018
va

 

நில விற்பனை தொடர்பான வழக்கில் நடிகர் வடிவேலு மற்றும் நில உரிமையாளர் இடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது.

 

தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் கடந்த 1993ம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவர் தொழில் செய்ய இரும்புலியூரில் உள்ள தனது 34 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்று இருந்தார்.  இந்த கடன் தொகையை  செலுத்தாததால் பிணையாக வைக்கப்பட்ட சொத்தை தொழில் முதலீட்டு நிறுவனம் கடந்த 2006ம் ஆண்டு பொது ஏலம் மூலம், சென்னை அசோக் நகரை சேர்ந்த சொக்கலிங்கம் பழனியப்பன் என்பவருக்கு விற்றது.

 

இந்த நிலையில், ராமச்சந்திரன் இறந்த பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள்  அந்த நிலத்தை விற்க, நடிகர் சிங்கமுத்துவுக்கு பவர் ஆப் அட்டர்னி எழுதி கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து  நடிகர் வடிவேலுவுக்கு இந்த நிலம் விற்பனை செய்யபட்டது. போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தாக கூறி நடிகர் வடிவேலு உள்ளிட்டோரை நிலத்தில் இருந்து அப்புறப்படுத்தவும் நிலத்தின் உரிமையை தனக்கு உறுதி செய்யவும் கோரி  பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

மோசடி செய்ததாகக் கூறிய பழனியப்பன் உள்பட இருவருக்கு  எதிராக 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த அனைத்து வழக்குகளும்  நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது நில பிரச்னை தொடர்பாக நடிகர் வடிவேலு மற்றும் பழனியப்பன்  இடையே சமரசம் ஏற்பட்டு, பழனியப்பன் தரப்பில் வடிவேல் தரப்பினருக்கு 85 லட்சம் ரூபாய்க்கான  வரைவோலையை அளிக்கப்பட்டது. இதனையடுத்து பழனியப்பனிடம் நஷ்ட ஈடு கோரிய மனுவை நடிகர் வடிவேலு திரும்ப பெற்றுக் கொண்டார். இதையடுத்து அனைத்து வழக்குகளையும் நீதிபதி முடித்து வைத்தார்.

சார்ந்த செய்திகள்