சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.