தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்திருக்கும் ரஜினிகாந்த், அரசியல் கட்சியை துவங்குவது குறித்து தனது ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் சமீபத்தில் கலந்துரையாடினார்.
அந்த கலந்துரையாடலின் போது, "அரசியல்கட்சி ஆரம்பிப்பது உறுதி. கட்சியின் தலைவராக இருப்பேன். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருக்க மாட்டேன். சுருக்கமாகச் சொல்லனும்னா முதலமைச்சராக நான் இருக்க மாட்டேன்" என தனது திட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இது, ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குத் அதிர்ச்சியைத் தந்தது. மேலும் இந்த முடிவை ஏற்கவும் நிர்வாகிகள் மறுத்தனர். இது தான் ரஜினிக்கு ஏமாற்றமாக இருந்தது.
இந்த நிலையில், ரஜினியை அரசியல் பிரபலங்கள் சிலர் சந்தித்து அவருடன் பேசிவிட்டு வந்துள்ளனர்.அவர்களிடமும் தனது திட்டத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார் ரஜினி. அவருடைய இந்த முடிவுக்கு ஆதரவும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், 'கட்சி தலைவர் மட்டும்தான்; முதல்வர் வேட்பாளர் கிடையாது. எனக்கு பதவி ஆசை இல்லை 'என்கிற தனது திட்டத்தை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி வெளிப்படுத்தவிருக்கிறார்.
இந்த பத்திரைகையாளர் சந்திப்பு என்பது, சாதாரணமான சந்திப்பு என்கிற அளவில் இல்லை. பெரிய ஸ்டார் ஹோட்டலில் அல்லது ராகவேந்தர் திருமண மண்டபத்தில் அனைத்து பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களை அழைத்து முழுமையான சந்திப்பை நடத்த தீர்மானித்துள்ளார் ரஜினி. விரைவில் நடக்கவிருக்கும் அந்த சந்திப்பு தமிழக அரசியலில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என நக்கீரன் இணையளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் நாளை காலை 11.00 மணி அளவில் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திப்பதாக தெரிவித்திருக்கிறார் ரஜினி. இந்த சந்திப்பின்போது தனது அரசியல் திட்டம், எதிர்கால செயல்பாடுகள் குறித்து பேசுவார் என்றும், செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.