தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது ஆண்டு பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடலில் திறந்தவெளி திரையரங்க நிதி ஒதுக்கீட்டுக்கு நன்றி தெரிவித்தும், சங்க கட்டத்திற்குத் தொகை பெற அமைச்சர் உதயநிதி ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சங்கத்தின் கணக்கு வழக்குகளை நடிகர் கார்த்தி சமர்ப்பித்து பேசினார்.
'நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்கான கலை நிகழ்ச்சிகளில் நடிகர் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் பங்கேற்பதாக உறுதி தெரிவித்துள்ளனர்' என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். மேலும், 'நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்ததால் நிதிச்சுமை கூடுதலாக அதிகரித்துள்ளது. நடிகர் சங்கத்திற்கு நடிகர் விஜய் கடனாக அல்லாமல் நிதியாக ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார். நடிகர் சங்க மகளிருக்கான புகார்கள் குறித்து விசாரிப்பதற்கு நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.