தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார். இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டது. கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரைப்படம் வெளியிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், இந்த திரைப்படத்தை திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளங்களில் வெளியிட முடிவு செய்த படக்குழு திரைப்படம் வெளியாகும் தேதியையும் அறிவித்தது. அப்பொழுது தனுஷ் ரசிகர்கள் தங்கள் நாயகனை திரையரங்கில் பார்க்க முடியாமல் போனது குறித்து கடும் அதிருப்தி அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து, கர்ணன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி அதை ஓரளவு சரி செய்தது. இப்பொழுது வரும் ஜூன் 18- ஆம் தேதி தனுஷ் நடித்துள்ள இந்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் இசை குறித்த ஒரு நிகழ்வு ட்விட்டர் ஸ்பேசஸ் (Twitter Spaces) தளத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகளும், பாடகியுமான தீ, பாடலாசிரியர் விவேக், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டு ரசிகர்களுடன் உரையாடினர்.
இதில் ரசிகர்களின் கேள்விக்கும் நடிகர் தனுஷ் பதிலளித்தார். அதில், பலரும் கேட்டிருந்த ஒரு கேள்வி எப்போது ரசிகர்களுடன் ஃபோட்டோ ஷூட் நடத்துவீர்கள்? என்பது. இதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ், "நாம் இப்போது இருக்கும் நிலைமையில் முதலில் அனைவரும் அவரவர் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். இப்படி எல்லா விதத்திலும் பாதுகாப்பாக இருந்து இந்த வைரஸ முதல்ல தோற்கடிக்கலாம். அப்புறம் நிலைமையெல்லாம் சரியான பிறகு கண்டிப்பாக ஃபோட்டோ ஷூட் பண்ணலாம்" என்று கூறினார்.