
தென்மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களை தூக்கி வீசிவிட்டு புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.
இதனால் இராமநாதபுரத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குட்டி அரசர்களாக தனி சாம்ராஜ்ஜியம் நடத்திய முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மகன் சுப.த.திவாகரன் பதவியிலிருந்து தூக்கப்பட்டது திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்சமயம் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ காதர்பாட்ஷா (எ) வெள்ளைச்சாமியின் மகனாவார். இந்த மாவட்ட செயலாளர் மாற்றம் பற்றி உடன்பிறப்புகளிடம் கேட்டபோது,
"கடந்த தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட திமுகவால் வெற்றி பெற முடியவில்லை. இதுபற்றிய புகார்களை ஸ்டாலின் நேர்காணல் நடத்திய போது ஆதாரத்துடன் கட்சியினர் தெரிவித்தனர். அப்பொழுது அமைதியாக இருந்த ஸ்டாலின் இப்பொழுது அவரை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து மாற்றியது வரவேற்கதக்கது" என்றனர்.
"இதே போல் அவரது தந்தை சுப.தங்கவேலன் மீது பல்வேறு புகார்கள் அறிவாலயத்திற்கு சென்றபோதும் கலைஞரிடம், 'தலைவரே நீங்கள் இப்பொழுதே வெளியேற சொன்னாலும் நான் வெளியேறிவிடுவேன்' என்று கண்ணீர் மல்க கூறுவார். உள்ளே செல்லும்பொழுதே மூக்குப்பொடியை கண்களில் தடவி கொள்வார். இதனால் மனம் உருகும் கலைஞரோ சரி இனிமேலாவது எந்த புகாரும் வராமல் கட்சி பணியை பாருங்கள் என்று கூறி அனுப்பிவிடுவார். இப்படியே பல ஆண்டுகளை ஓட்டிவிட்டார்" என்கிறார் இன்னொரு உடன்பிறப்பு.
சுப.தங்கவேலன் மாவட்ட செயலாளராக இருந்தபோது ஜே.கே.ரித்திஷ் திமுக எம்பியாக இருந்தார். இருவரும் முதலில் தாத்தா, பேரன் என்ற உறவுடன் சென்றவர்கள் இடையில் உறவில் விரிசல் ஏற்பட்டது. இவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி இவரை மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து தூக்க வேண்டும் என்று பல குட்டிகரனங்களை அடித்துப்பார்த்தார். ஆனால் தங்கவேலனோ எதிரிகளை ஒழிப்பதில் பலே கில்லாடி. கடைசியில் ரித்திஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களை முகவரியில்லாமல் ஆக்கிவிட்டார்.
இராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் மாவட்ட செயலாளர் பதவியை மாற்றியது போல் ஒன்றியம்,நகரம் போன்றவர்களை மாற்ற வேண்டும் என்கிறார்கள்.