“காவல்துறையை அணுகினால் தனக்கு நீதி கிடைக்கும் என்று ஒரு சாதாரண மனிதன் என்றைக்கு நம்புகிறானோ, அன்றைக்குத்தான் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று அர்த்தம். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருக்கிறது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியுமா?” என்று நம்மிடம் ஆதங்கத்தோடு கேட்டார் அப்துல்கலாம் லட்சியா இந்தியா இயக்கத்தின் தலைமை வழிகாட்டியான பொன்ராஜ்.
ஏதோ ஒரு ‘சீரியஸ்’ விவகாரத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான், அவரை இந்த அளவுக்குப் பேச வைத்திருக்கிறது என்பதை நம்மால் அறிய முடிந்தது. அவரே அந்த விவகாரத்தை விவரித்தார்.

“புதுக்கோட்டையைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் மகள் ராஜாத்தி. எம்.காம். படித்த இவரை, ஓமனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி அழைத்துச் சென்றார் திருவாரூரைச் சேர்ந்த பாத்திமா பேகம். ஓமன் நாட்டிற்குச் சென்றதும் ராஜாத்தியை சமையல் வேலை செய்யச் சொல்லி வற்புறுத்தியிருக்கின்றனர். முடியாது என்று மறுத்திருக்கிறார் ராஜாத்தி.
அல் மஸ்டாக் மேன் பவர் சப்ளை என்ற பெயரில் இயங்கிவரும் ஏஜென்ஸியின் மேனேஜர் ஜலால், ராஜாத்தியை அடித்து துன்புறுத்தி, அரை நிர்வாணப்படுத்தி, கட்டாயப்படுத்தி சமையல் வேலை செய்ய வைத்திருக்கிறான். அங்கு அந்தப்பெண் பலவிதத்தில் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறாள். துணி துவைக்க வேண்டும்; ஆறு கழிப்பறைகளைக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு நாளில் 16 மணி நேரம் இதுபோன்ற கடுமையான வேலைகளைச் செய்யவைத்து, ஒருவேளை உணவையும் சாப்பிடவிடாமல் பண்ணியிருக்கின்றனர்.
தனக்கு ஏற்பட்ட அவல நிலையை, அப்துல்கலாம் லட்சிய இந்தியா இயக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் மகேந்திரன் ஆகியோரைத் தொடர்புகொண்டு அழுதபடி தெரிவித்திருக்கிறார் ராஜாத்தி. உடனே நான், ராஜாத்தியிடம் பேசி, ஓமனில் வசிக்கும் நண்பர் சுரேஷ் பாரதியிடமும் பேசி, அனைத்து விபரங்களையும் பெற்று, ராஜாத்தியின் தாயார் சரஸ்வதி மூலம் மனுவைத் தயார் செய்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஓமன் இந்திய தூதரகத்திற்கும் அனுப்பினேன். தமிழக முதலமைச்சரிடமும் அந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது. ஓமன் நண்பர் சுரேஷ் பாரதி மூலமாக கடந்த 10 நாட்களாக ராஜாத்தியிடம் தொடர்புகொண்டு பல்வேறு முயற்சிகளை எடுத்தேன். தூதரகம் மூலமாக அந்த வீட்டு உரிமையாளரிடம் பேசி ராஜாத்தியை விடுவிக்க நடவடிக்கை எடுத்தோம். அந்த வீட்டு உரிமையாளரோ, ராஜாத்தியை அந்த மேன்பவர் ஏஜென்ஸி பாத்திமா பேகத்திடமே கொண்டுபோய் விட்டுவிட்டார்.

பாத்திமா பேகத்தால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டிருக்கிறார் ராஜாத்தி. தலை, உதடு, கை, தொடை என உடலில் பல இடங்களிலும் தாக்கி ரத்தக்காயங்களை ஏற்படுத்தி சித்திரவதை செய்த பாத்திமா பேகம், கைரேகை வாங்கி ராஜத்தியை ஒரு இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார். அப்போது, சமயம் பார்த்து ராஜாத்தியை தப்பிவரச் செய்திருக்கிறார் சுரேஷ் பாரதி. அவர் மூலமாக கேரளா அசோசியேஷன் நண்பர்கள், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த லெனின் மற்றும் முருகேசன் ஆகியோரின் உதவியோடு, தப்பி வந்த ராஜாத்திக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓமன் இந்திய தூதரகத்தில் அவர் பத்திரமாகச் சேர்க்கப்பட்டார்.

ராஜாத்தி மட்டுமல்ல. இப்படி பல பெண்கள் அங்கே அடிமைப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி, பிறகு மீட்கப்பட்டு இந்திய தூதரகத்தில் அடைக்கலம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தமிழகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கூடிய சீக்கிரமே, ராஜாத்தி உள்ளிட்ட பெண்கள் அனைவரும் அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி விடுவார்கள்.
புதுக்கோட்டை நண்பர் அசோக்குமார் மூலமாக, ராஜாத்தியின் தாயார் சரஸ்வதியின் புகார் மனுவை, எஸ்.பி. மூலமாக டி.எஸ்.பி.யிடம் சேர்த்திருக்கிறோம். தமிழகத்திலுள்ள பெண்களை ஏமாற்றி, அங்கு அழைத்துச்சென்று அடிமைகளாக நடத்துவதற்குக் காரணமாக இருக்கும் பாத்திமா பேகம் மற்றும் பார்வதி ஆகியோர் மீது தூதரகம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இமிகிரேஷன் அலுவலகத்தில் லுக்-அவுட் நோட்டீஸ் தந்து, பாத்திமா பேகம் சென்னை வரும்போது, விமான நிலையத்திலேயே அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும். இது நடந்தால்தான், அரபு நாடுகளில் துயரங்களைச் சந்தித்துவரும் நூற்றுக்கணக்கான பெண்கள் தப்பிக்க முடியும்.

இந்த இழிநிலைக்கு யார் காரணம்? பட்டப்படிப்பு, மேற்படிப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.30000 சம்பளம் கிடைக்கின்ற வேலை கிடைத்திருந்தால், அந்தப் பெண்களுக்கு இப்படி ஒரு அவலம் ஏற்பட்டிருக்காது. சொந்த நாட்டில் அப்படி ஒரு வேலை வாய்ப்பினைக் கொடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகள்தான், இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டும்.” என்றவர், இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறையின் அலட்சியப் போக்கினையும் சுட்டிக்காட்டினார்.
“ஓமனில் மீட்கப்பட்ட ராஜாத்தியின் அம்மா சரஸ்வதியை தொடர்ந்து அலைக்கழித்திருக்கின்றனர். அதனால், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக பலமுறை அவர் செல்ல நேரிட்டது. அந்தக் காவல்நிலையம் புகாரை ஏற்க மறுத்த நிலையில், நமது வற்புறுத்தலின் பேரில், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தனர். மேலதிகாரிகள் பரிந்துரை செய்தாலும், கீழ்நிலையில் உள்ள ஒருசில காவலர்கள் சாதாரண மக்களின் பிரச்சனையை எவ்வளவு கேவலமாகக் கையாள்கிறார்கள் என்பதற்கு சரஸ்வதியின் புகாரே ஒரு எடுத்துக்காட்டு.

முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சனையில், கொடுத்த புகாருக்குப் பதிலாக வேறொரு புகாருக்கு சி.எஸ்.ஆர். கொடுத்திருக்கின்றனர். அதில் சரஸ்வதியின் கையெழுத்தையும் பெற்று புகாரைப் பதிவு செய்திருக்கின்றனர். காவல் நிலையங்கள், சாதாரண மக்களின் பிரச்சனையை மிகமிகக் கேவலமாகக் கையாள்கிறார்கள் என்பதற்கு சாட்சியமாக இருக்கிறது தவறாக எழுதப்பட்ட அந்த சி.எஸ்.ஆர். பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொண்ட கணேஷ் நகர் காவல் நிலைய அதிகாரிகள் மீது தமிழக காவல்துறை தலைவர், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மெத்தனமாகச் செயல்படும் கணேஷ் நகர் காவல் நிலைய அதிகாரிகள் பாத்திமா பேகம், ஜலால், பார்வதி போன்ற போலி ஏஜண்டுகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? ராஜாத்தி போன்ற அபலைப் பெண்களுக்கு தமிழ்நாட்டில் எப்படி நீதி கிடைக்கும்? என்றெல்லாம் மனதுக்குள் கேள்விகள் எழுகின்றன. தமிழகத்தில் நீதி மறுக்கப்பட்டு கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பல சம்பவங்கள் போல இதுவும் கடந்துபோகும் என்றால், தமிழக ஆட்சிமுறை நிர்வாகத்தின் மேல், சட்டம் ஒழுங்கின் மேல், சாதாரண மனிதர்களுக்கு உள்ள நம்பிக்கை தகர்ந்துபோகும். இனிவரும் காலங்களில் இதற்கான விலையை ஆட்சிமுறை நிர்வாகத்தை தற்போது நடத்துபவர்கள் கொடுத்தே ஆகவேண்டும்.” என்றார் கொதிப்புடன்.
தமிழரான ராஜாத்தி அனுபவித்த கொடுமைகள், காலம் காலமாக இந்தியப் பெண்களுக்கு ஓமன் போன்ற அரபு நாடுகளில் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண எந்த அரசாங்கமும் முனைந்ததில்லை. வாக்களிப்பதை ஜனநாயகக் கடமை என்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்பவர்கள், இந்திய மக்கள், குறிப்பாக பெண்கள் சந்தித்துவரும் இதுபோன்ற பிரச்சனைகளில் உரிய கவனம் செலுத்தாததை என்னவென்று சொல்வது?