Skip to main content

யானையிடம் பலியான வன ஊழியர்...!

Published on 24/12/2019 | Edited on 24/12/2019

காட்டுக்குள் கேமரா பொருத்துவதற்கு சென்ற வனக்காப்பாளரை யானை தாக்கி கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Wild elephant-Forest guard

 



ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கீழ்முடுதுறை என்ற கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(46). இவர் பவானிசாகர் வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணிபுரிந்து வந்தார். இன்று மதியம் வனக்காப்பாளர் மகேந்திரன், வேட்டைத்தடுப்பு காவலர்கள் மூன்று பேர் என 4 பேர் வனப்பகுதியில் தானியங்கி கேமரா பொருத்தும் பணிக்காக கொத்தமங்கலம் வனப்பகுதிக்கு சென்றனர்.

அடர்ந்த காட்டுப் பகுதியான அங்கு அருளப்பன்கிணறு என்ற இடத்திற்கு சென்று கேமராக்களை பொருத்திக்கொண்டிருந்தனர். அப்போது புதர்மறைவில் இருந்த யானை ஒன்று மகேந்திரன் உட்பட 4 பேரையும் துரத்தியது. 4 பேரும் யானையிடமிருந்து தப்பிப்பதற்காக காட்டுக்குள் ஓடினார்கள். அப்படியிருந்தும் அந்த யானை வனக்காப்பாளர் மகேந்திரனை தனது தும்பிக்கையால் துரத்திப்பிடித்து அந்த இடத்திலேயே மிதித்துக்கொன்றது.

இதைக்கண்ட வேட்டைத்தடுப்புக் காவலர்கள் பதறியபடி உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானையை துப்பாக்கி சத்தம் மற்றும் பட்டாசு மூலம் விரட்டியடித்துவிட்டு மகேந்திரனின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

யானை தாக்கி வனத்துறை ஊழியர் பரிதாபமாக பலியான சம்பவம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை பணியாள்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த வனக்காப்பாளர் மகேந்திரனுக்கு வெண்ணிலா என்ற மனைவியும், சிறு வயதில்  இரு மகன்களும் உள்ளனர். இவை குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளார்கள். 

சார்ந்த செய்திகள்