Skip to main content

போலி ஜாதி சான்றிதழ் அளித்து தேர்தலில் போட்டி; பஞ்சாயத்து தலைவர் மீது ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

Published on 13/08/2024 | Edited on 13/08/2024
Action taken by the Collector against the Panchayat President for fake certificate

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட வேலூர் உட்பட  9 மாவட்டங்களுக்கு மட்டும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த 2021-ம் ஆண்டு ஆக்டோபர் மாதம் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  வேலூர் மாவட்டம் அணைகட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சியில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட கல்பனா என்பவர் 609 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுத் தலைவராக ஆனார்.

இந்த நிலையில், கல்பனா போலி சான்றிதழ் கொடுத்து வெற்று பெற்றதாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்யராஜ் என்பவர் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தார். அந்த புகாரில், ‘தோளப்பள்ளி ஊராட்சி ஆதிதிராவிடர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தலைவராக வெற்றி பெற்றுள்ள கல்பனா என்பவர் மாற்று சமுகத்தைச் சேர்ந்தவர். இவர், தேர்தல் வேட்புமனுவில் போலியான பட்டியலினத்தவர் சாதி சான்றிதழைக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்’ எனத் தெரிவித்திருந்தார். 

இது குறித்து, மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்படும் விழிக்கண் குழு தொடர் விசாரணை நடத்தியதில் தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் கல்பனா  ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றும் முறைகேடாக சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கல்பனா மீது வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டது. அதனைத் தொடர்ந்து,  கல்பானாவின் ஆதிதிராவிடர் சாதி சான்று கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதால் அவர், தலைவராக செயல்படாத நிலை இருந்தது. இந்த நிலையில், நீண்ட விசாரணைக்கு பின்பு 2 ஆண்டுகள் கழித்து தோளப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் கல்பனாவை இன்று  தகுதி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்