தேனி மாவட்டத்தில் உள்ள தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, கம்பம், சின்னமனூர் உட்பட அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் முகாம்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த நிலைகளில் சிகிச்சை பெற்றுவரும் மக்களுக்கு மருந்து மாத்திரைகளைக் கூட சரிவர வழங்குவது இல்லை.
அதுபோல் கரோனா தொற்றால் மாவட்ட அளவில் பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டு சிகிச்சையில் இருந்து கொள்கிறோம் என்று கூறி விட்டுச் செல்கிறார்கள். அப்படி செல்லக்கூடிய மக்களுக்கு உங்கள் பகுதியிலேயே இருக்கக்கூடிய சுகாதார அலுவலர்கள் வந்து மருந்து மாத்திரைகளைக் கொடுப்பார்கள், நீங்கள் தனிமையில் இருந்துகொள்ளுங்கள் என்று கூறி அனுப்பிவிடுகிறார்கள். அதன்மூலம் மாவட்டத்தில் 5,000 பேர்வரை வீட்டு சிகிச்சையில் இருந்துவருகிறார்கள். அவர்களுக்கு மருந்து மாத்திரைகளையும் முழுமையாக கொடுக்கவில்லை, கேட்கப் போனால், ‘மருந்து மாத்திரைகள் தீர்ந்துவிட்டன. சென்னைக்கு தகவல் சொல்லியிருக்கிறோம், அங்கிருந்து மருந்து மாத்திரைகள் வந்தால்தான் கொடுப்போம்’ என்று கூறுகிறார்கள்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டுகொள்ளாமல் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணஉன்னி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் இளங்கோவன் உட்பட சுகாதார அதிகாரிகள் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்துவருகிறார்கள் என்று நாம் நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து இந்த விஷயத்தைக் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். அதன் அடிப்படையில்தான் தேனி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் உட்பட சுகாதார அதிகாரிகளிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தனது சொந்த பணத்தில் 16 லட்சத்தை உடனடியாக மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவரும் மக்களுக்கு மருந்து மாத்திரைகளை உடனடியாக வாங்கிக் கொடுக்க உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகள் அமைச்சர் ஐ.பி. கொடுத்த பணத்தை வைத்து மருந்து மாத்திரைகளை வாங்கி கரோனா தொற்றால் வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் மக்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மக்களுக்கும் மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்துவருகிறார்கள். இப்படி அமைச்சரின் அதிரடி நடவடிக்கையைக் கண்டு தேனி மாவட்ட மக்களே அமைச்சர் ஐ. பெரியசாமியை மனதார பாராட்டிவருகிறார்கள்.