சென்னை பாரிமுனை பகுதியில் வீரபத்ர சுவாமி கோவில் இன்று (10-11-23) காலை மதுபோதையில் இருந்த ஒருவர் அந்த கோவிலின் உள்ளே சென்றுள்ளார். அப்போது திடீரென்று அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை கோவிலுக்குள் வீசியதாகக் கூறப்படுகிறது. இதனை பார்த்த மக்கள் கூச்சலிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதுபோதையில் இருந்த நபரை பிடித்து கைது செய்தனர்.
இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசிய நபர் முரளி கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. மேலும், இவர் அந்த கோவில் அருகே பழக்கடை ஒன்றை வைத்து நடத்தி வந்த நிலையில், இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் பெட்ரோல் குண்டை கோவிலுக்கு வீசியதாகக் காவல்துறையினரிடம் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு, “சென்னை பாரிமுனை, ஶ்ரீ வீரபத்ரசாமி திருக்கோவில் உட்பிரகாரத்துக்கு உள்ளேயே, பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த கொடுஞ்செயலை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறேன். நான் ஏற்கனவே பலமுறை எச்சரித்தும் இந்த திமுக அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்திருப்பதன் எடுத்துக்காட்டே இந்த சம்பவம்.
முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில், ஆளுநர் மாளிகை தொடங்கி ஆலயங்கள் வரை எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு கலாச்சாரம் பரவி வருவதை கண்டு மக்கள் அச்சத்துடனும் இந்த ஆட்சியாளர்கள் மீது கடுங்கோபத்துடனும் இருந்து வருகின்றனர். முதல்வர் இனியேனும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்”என தெரிவித்துள்ளார்.