திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சன்குறிச்சி கிராமத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முந்திரி காடுகள் உள்ளன. பரந்து விரிந்த இந்தக் காட்டில் லட்சக்கணக்கான மரங்கள் இருந்தன. இந்தக் காடுகளின் மூலம் தச்சன்குறிச்சி, குமுலூர் ரெட்டி, மாங்குடி, புதிய உத்தமனூர், சிறுகனூர், மயிலம்பாடி, கண்ணாடி, கல்பாளையம், புறத்தாக்குடி, கொளக்குடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாழ்வாதாரம் பெற்று வந்தனர். வானம் பார்த்த பூமியான தச்சன்குறிச்சி பகுதியில் விவசாய நிலங்கள் என்பது மிகவும் குறைவு.
முந்திரி பழ சீசன் காலமான பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கிராம மக்கள் பழத்தைப் பறித்து விற்பனை செய்து வாழ்வாதாரத்தை நடத்திவந்தனர். லட்சக்கணக்கான முந்திரி மரங்கள் இருந்த காட்டில் தற்போது குறைந்த எண்ணிக்கையான மரங்களே உள்ளன. காட்டில் உள்ள ஏரிகள் தூர்வாரப்படாமல் உள்ளன. இந்த ஏரிகளைத் தூர்வாரி, மழை நீரை சேமித்தால் முந்திரி மரங்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்படாது. மேலும், சிலர் காடுகளை அழித்துவருவதால் காடுகளில் உள்ள மான், காட்டுப்பன்றி, குரங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது.
எனவே வனத்துறையினர் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஏரிகளைத் தூர்வாரி கூடுதலாக மரக்கன்றுகள் நடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தச்சன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “சொட்டு நீர் பாசனம் மூலம் காடுகள் பல்வேறு ஊர்களில் தொடங்கப்பட்டு 100 நாள் வேலை திட்டம் மூலம் பராமரிக்கப்பட்டுவருகிறது. அதேபோல் தச்சன்குறிச்சி கிராமத்தில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள மூங்கில் காடுகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்” என்றனர்.